கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டவர்: நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் யுவராஜ் சரண் அடைந்தார் போலீஸ் கெடுபிடியை மீறி மாறுவேடத்தில் வந்ததால் பரபரப்பு

Source: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டவர்: நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் யுவராஜ் சரண் அடைந்தார் போலீஸ் கெடுபிடியை மீறி மாறுவேடத்தில் வந்ததால் பரபரப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டவர்: நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் யுவராஜ் சரண் அடைந்தார் போலீஸ் கெடுபிடியை மீறி மாறுவேடத்தில் வந்ததால் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 22). இவர் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி பள்ளிபாளையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களில் யுவராஜின் தம்பி தங்கதுரை உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
 
இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவரும், ரிக் தொழில் அதிபருமான யுவராஜை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கோகுல்ராஜ் படுகொலை வழக்கு மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு என இரண்டு வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
 
3 பேர் கைது
 
இதையடுத்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த யுவராஜிக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். இருப்பினும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, நாமக்கல் கோர்ட்டில் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மேலும், யுவராஜை கைது செய்ய 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
 
இருப்பினும் தலைமறைவாக இருந்த யுவராஜ் அவ்வப்போது ‘வாட்ஸ்-அப்’ மூலம் போலீசுக்கு சவால் விடும் வகையில் ஆடியோ வெளியிட்டும், தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தும் வந்தார். இதைத்தொடர்ந்து யுவராஜை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இதன் தொடர்ச்சியாக யுவராஜூக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவரது பேச்சை ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரவ விட்டதாகவும் அவரது நண்பர்கள் பிரபு, சுரேஷ், கிரிராஜன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் இந்த சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் பிரபு, சுரேஷ், கிரிராஜன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் யுவராஜை நெருங்கி வந்தனர்.
 
சரண் அடைய முடிவு
 
இதற்கிடையே, அவரது நண்பர் வக்கீல் அமுதரசு வருகிற 11-ந் தேதி யுவராஜ் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண் அடைவார் என தெரிவித்து இருந்தார். இதனை உண்மை என நிரூபிக்கும் வகையில் நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்து வந்த யுவராஜ் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் திட்டமிட்டபடி 11-ந் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண் அடைவேன் என தெரிவித்து இருந்தார்.
 
இதையொட்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜன், வேலன் ஆகியோர் முன்னதாகவே வந்து தயார் நிலையில் இருந்தனர்.
 
போலீசாருடன் வாக்குவாதம்
 
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த யுவராஜின் ஆதரவாளர்களை அங்கு நெருங்க முடியாத அளவுக்கு போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேரம் செல்ல, செல்ல அவரது ஆதரவாளர்கள் அங்கு முண்டி அடித்து கொண்டு வர தொடங்கினர். போலீசார் அவர்களை அவ்வப்போது துரத்தி வந்தனர். சில நேரங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
 
இந்த நிலையில் காலை 9.30 மணி அளவில் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர். எனவே, யுவராஜை வரும் வழியில் போலீசார் மடக்கி கைது செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. இருப்பினும் அங்கு வந்திருந்த யுவராஜின் வக்கீல் ஆனந்த், ‘யுவராஜ் திட்டமிட்டபடி சரண் அடைவார், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் இங்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது’ என்றார்.
 
11 மணிக்கு சரண்
 
அவர் அறிவித்தபடி காலை 10.30 மணி வரை சரண் அடைய வரவில்லை. எனவே, அவர் ஈரோடு அல்லது சங்ககிரியில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சரண் அடைய போவதாக தகவல் பரவியது. இதற்கிடையே யுவராஜ், சரியாக 11 மணி அளவில் தனது ஆதரவாளர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார்.
 
அவர் கருப்பு நிற டீ-சர்ட், லுங்கி அணிந்து இருந்தார். தலையில் சிவப்பு தொப்பி அணிந்து இருந்தார். தோளில் பச்சை நிற துண்டு ஒன்றை சுற்றி இருந்தார். அவர் மாறு வேடத்தில் இருந்ததால் உடனடியாக அவரை அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து அவர் தொப்பியை கழற்றி வீசினார். பின்னர் அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் அவரை தோளில் தூக்கி வைத்து, கோஷங்களை எழுப்பினர்.
 
சட்டப்படி நிரூபிப்பேன்
 
இதையடுத்து டீ-சர்ட், லுங்கி போன்றவற்றை கழற்றி விட்டு, கருப்பு நிற பேண்ட் மற்றும் வெள்ளை சட்டையுடன் ஆதரவாளர்களை நோக்கி கை அசைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இந்த வழக்கு பொய் வழக்கு என்பதை சட்டப்படி நிரூபிப்பேன். இந்த வழக்கில் தவறு செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் தண்டனை பெற்று தருவேன். இந்த வழக்கை தவறான முறையில் வழிநடத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதையடுத்து போலீசார் அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி மற்றும் அதிகாரிகள் அவரிடம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தகவல் அறிந்து அங்கு வந்த யுவராஜின் தந்தை சுப்பிரமணியமும் அவரை பார்த்து சென்றார். யுவராஜ் சரண் அடைந்த சம்பவத்தால் நாமக்கல் நகர் முழுவதும் பரபரப்பு நிலவியது.
 
ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசாரால் முதல் குற்றவாளியாக கருதப்பட்டு தேடப்பட்டு வந்த யுவராஜ் நேற்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைய இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த யுவராஜ், தான் கேரளாவில் இருப்பதாக கூறினார்.
 
எனவே, நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழையும் முன்பே அவரை கைது செய்ய உள்ளூர் போலீசார் திட்டம் போட்டனர். இதையொட்டி நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள 7 சோதனைச்சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இரவு-பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 
மேலும் 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த யுவராஜ், சரண் அடைய போகிறேன் என்றதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
பலத்த போலீஸ் பாதுகாப்பு
 
இதற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். நாமக்கல் மாவட்ட போலீசார், வெளிமாவட்ட போலீசார் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டனர்.
 
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் போலீசார் சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, முதலைப்பட்டி பைபாஸ் உள்ளிட்ட 9 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
 
பட்டறையில் பதுங்கல்
 
போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, காலை 11 மணி அளவில் மாறுவேடத்தில் யுவராஜ் சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அதிகாலையிலேயே நாமக்கல் வந்த யுவராஜ், சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் அமைந்துள்ள பொன்நகர் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் பட்டறையில் பதுங்கி இருந்ததாகவும், அங்கிருந்து போலீசாரை கண்காணித்து வந்த அவர், தான் அறிவித்தபடி சரண் அடைந்து விட்டதாகவும் பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
100 நாட்களுக்கும் மேலாக போலீசார் கையில் சிக்காமல் இருந்த யுவராஜ், கடைசி நேரத்திலும் கைது ஆகாமல் அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு சரண் அடைந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
 

FE_1210_MN_04_Cdl3607 FE_1210_MN_04_Cdl3606

ராஜேஷ் ஜோக்ஸ்-2

‘‘பட்டிமன்ற தலைப்பைக் கேட்டு தலைவர் ஏன் டென்ஷன் ஆகிட்டார்..?’’
‘‘2016ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் தலைவர் ‘புகழ் பெறுவாரா… புழல் பெறுவாரா’ன்னு பேசப் போறாங்களாம்!’’


‘‘யாருக்கு ஆரத்தி எடுக்க இப்படி வாசல்ல காத்திருக்கீங்க..?’’
‘‘இன்னிக்கு புதுசா வேலைக்கு சேர்ற
நர்சுக்குத்தான் டாக்டர்..!’’

‘‘சுத்தியும் தண்ணி… நடுவுல நாமிருக்கோம்னு சொன்னா தலைவருக்குப் புரிய மாட்டேங்குது…’’
‘‘என்ன சொல்றாரு..?’’
‘‘சைடுடிஷ் ஒண்ணுமில்லையான்னு கேக்கறாரு!’’

‘‘பட்டப்பகல்ல வீடு புகுந்து திருடியிருக்கே நீ…’’
‘‘இப்போ வர்ற பேய்ப் படங்களையெல்லாம் பார்த்ததுல இருட்டினதும் பயம் வந்துடுது எசமான்… அதான்!’’

‘‘நீங்க ஏன் உங்க பொண்டாட்டிக்கு எல்லா விஷயத்தையும் எஸ்.எம்.எஸ் அனுப்பறீங்க..?’’
‘‘அவ என் பேச்சைக் கேட்க மாட்டா… அதான்!’’
– வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘எங்கள் தலைவர் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்தான்… அதற்காக அவரை ‘மிரட்சித் திலகம்’ என்று நையாண்டியாய் அழைக்கும் எதிர்க்கட்சியினரை
வன்மையாகக் கண்டிக்கக் கடமைப்பட்டுள்ளேன்…’’

ராஜேஷ் சினி நியூஸ்

சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதாக இருந்த ஸ்ருதி ஹாசன் இப்போது விலகிவிட்டார். மறுபடியும் கீர்த்தி சுரேஷ் ஒன்ஸ்மோர் கேட்டு அவரோடு நடிக்கிறார்.

‘‘என் வாழ்க்கையில் நடந்தவற்றுக்கு எவரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. யாரும் என்னைத் தொந்தரவு செய்வதாகவும் நான் நினைக்கவில்லை’’ என பிரஸ் மீட் ஒன்றில் நெகிழ்ந்திருக்கிறார் நடிகர் சல்மான்கான்.

தென் ஆப்ரிக்கா அருகே இருக்கும் செஷல்ஸ் தீவு, தங்கள் கலாசார தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை அறிவித்துள்ளது. ‘என் மீது அன்பு கொண்ட செஷல்ஸ் மக்களுக்கும் அரசுக்கும் நன்றி’’ என ட்விட்டரில் நெகிழ்ந்திருக்கிறார் புயல்!

‘‘ ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் படமா?’’ என்ற கேள்வியை ஜி.வி.பிரகாஷிடம் கேட்டிருக்கிறார்கள். ‘‘அந்தப் படத்துல நான் வெறும் நடிகன்தான். நீங்க இந்தக் கேள்வியை டைரக்டர்கிட்டதான் கேட்கணும்’’ என்று செம ஸ்மார்ட் பதிலை வீசியிருக்கிறார் ஜி.வி.

உலகம் முழுக்க நம்பிக்கை, சத்தியம், மற்றும் ஒற்றுமையை விதைக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ், ‘Wake Up’ என்கிற ஆல்பத்தை வெளியிடுகிறார். அவரது முக்கிய உரைகளின் பகுதிகள், புனிதப் பாடல்கள் என எல்லாமே இசை கோர்க்கப்பட்டு, நான்கு மொழிகளில் வருகின்றன. நவம்பர் 27ல் வெளியாகவிருக்கிறது இந்த ஆல்பம்!

‘புலி’ பட ரிலீஸின்போது ஏ.எம்.ரத்னமும், டி.ஆரும் சேர்ந்துதான் லேபில் இருந்து எல்லா வேலைகளையும் பார்த்தார்கள். அதை நேரில் பார்த்த விஜய், உடனே அடுத்த படத்திற்கான கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டு, சம்பளத்திலும் கணிசமான தொகையை குறைத்துக் கொண்டார். படத்தின் டைரக்டர், காத்திருக்கிற
எஸ்.ஜே.சூர்யாவாக இருக்கலாம்.

மீண்டும் அஜித்தை சந்தித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கூடவே ‘வேதாளம்’ இயக்குனர் சிவாவும் சேர்ந்துகொள்ள, சிவகார்த்தியின் மதுரை சம்பவத்தில் தொடங்கி அடுத்த படம் வரை அத்தனையும் பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.

தனது 150வது படம் கமர்ஷியலாகவும் சமூக அக்கறையுடனும் இருக்க வேண்டும் என விரும்பிய சிரஞ்சீவி, ஏகப்பட்ட கதைகள் கேட்டு வந்தார். இப்போது ‘கத்தி’யை ரீமேக் செய்யும் முடிவு செய்திருக்கிறார்.

‘எந்திரன்2’வில் ரஜினியோடு நடிக்க அர்னால்டிடம் கேட்டிருக்கிறார்கள். வில்லன் கேரக்டர். அவரிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. டேட்ஸ், சம்பளம் பேசிய பிறகே அவர் நடிக்கிறாரா என்பது தெரியவரும்.

ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது தீபா சன்னிதியின் ஹாபி. மனதை பாதித்த விஷயங்களை எல்லாம் கவிதைகளாக்கி பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார் தீபா.

புலிகள் பாதுகாப்புக்கான தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அமிதாப். இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மும்பையின் சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவுக்குச் சென்றபோது, அமிதாப்பின் வாகனத்தை 4 கி.மீ தூரத்துக்கு துரத்தி வந்திருக்கிறது ஒரு புலி. அந்த த்ரில் அனுபவத்தை ரசித்து வந்திருக்கிறார் பிக் பி!

கைத்தறித் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக பட்டமளிப்பு விழாக்களில் வேட்டி, சேலை, குர்தா போன்ற கைத்தறி ஆடைகளையே பட்டதாரிகள்  அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்டது ஐதராபாத் பல்கலைக்கழகம். பிரிட்டிஷ் கால அங்கி முறையை மாற்றுவதற்கான இந்த முயற்சி, ஆடைக் கட்டுப்பாடு என பார்க்கப்பட்டு எதிர்ப்பு கிளம்ப, இப்போது ‘கைத்தறி உடை கட்டாயமில்லை’ என இறங்கி வந்துவிட்டது பல்கலைக்கழகம்!

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சராக இருக்கிறார்; அவரது மகன் ஒரு எம்.பி. வருகிற பீகார் சட்டசபைத் தேர்தலில் தம்பிக்கும், மருமகனுக்கும் சீட் வழங்கியிருக்கிறார் பஸ்வான். இதனால், ‘குடும்ப அரசியல்’ குற்றச்சாட்டு வலுக்க, பஸ்வானோ ‘‘வெற்றிவாய்ப்பு இருக்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கியிருக்கிறோம்’’ என்கிறார் சூடாக!

சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருக்கிறார் இந்தியப் பெண் ரினி சம்பத். இவரை ‘இந்தியக் கழிவுத் துண்டு’ என அசிங்கமாக விமர்சித்தார்கள் சக வெள்ளை இன மாணவர்கள். இதனால் காயப்பட்ட ரினி, அமெரிக்கக் கல்லூரி வளாகங்களில் நிலவும் நிறவெறி, பாலினப்பாகுபாடு பற்றி ஃபேஸ்புக்கில் எழுதினார். அவரது நெகிழ்ச்சிக் கட்டுரை ஆயிரக்கணக்கானவர்களால் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

‘தூங்காவன’த்தை தொடர்ந்து துரித காலத் தயாரிப்பாக ஒரு படத்தை தயாரிக்கிறார் கமல். அமெரிக்காவிலேயே நடக்கிற கதை. அங்கேயே போய் லொகேஷன் பார்த்துத் திரும்பியிருக்கிறார் உலக நாயகன்.

‘சண்டக்கோழி 2’ டிஸ்கஷனில் இருந்த லிங்குசாமி, திடீரென ‘பையா’ படத்தை இந்தியில் இயக்கப் போய்விட்டார்.

தனது மத வாரிசு குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார் தலாய் லாமா. ‘‘எனக்குப் பிறகு என் இடத்தில் ஒரு பெண் வந்தால் மகிழ்ச்சியே. ஆனால், அந்தப் பெண் மிகக் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவரால் ஒரு பயனும் இல்லை!’’ என லண்டனில் அவர் அதிரடியாகச் சொன்னது சர்ச்சைகளைக்
கிளப்பியிருக்கிறது.

மும்பையில் நேரம் கிடைத்தால் தன் வீட்டுத் தோட்டத்தைப் பராமரிப்பதில் பரவசமாகி விடுகிறார் ஹன்சிகா.  ‘‘சந்தோஷம் என்பது ரெடிமேடா கிடைக்கறதில்ல… நம்மளோட செய்கைகளினாலதான் அது தேடி வருது’’ என ஃப்ரெஷ் ஃபீல் காட்டுது பொண்ணு!

ராஜேஷ் ஜோக்ஸ்-1

மகளிரணித் தலைவி ஏன் டயட்ல இருக்காங்க..?’’
‘‘தலைவர், அவங்களை நமீதா மாதிரி இளைக்கச் சொல்லிட்டாராம்…


“காலணி ஆதிக்கத்தை ஒழிப்போம்னு எதிர்க்கட்சிக்காரன் கோஷம் போடறானே… ஏன்?’’
‘‘நீங்க பேசற மேடைல நிறைய செருப்பு விழுறதைப் பாத்து அவனுக்கு பொறாமை தலைவரே..!’’

தலைவர் செம மப்புல இருக்கார்னு எப்படிச் சொல்றே?’’
‘‘ரெய்டுக்கு வந்தவர்களிடம் கூட்டணி பேரம் பேசிக்கிட்டிருக்காரே!’’

நம்ம தலைவருக்கு பாவம் இப்ப டைமே சரியில்லை…’’
‘‘ஏன்… என்னாச்சு?’’
‘‘ராத்திரி தூக்கத்துல பத்து மணிக்கு மேல பேசினதுக்கு போய் கேஸ் போட்டுட்டாங்க!

ஸ்பீக்கரு…

‘‘எங்கள் தலைவர் பேசுவதை ஒளிபரப்பும்போது, ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் தீங்கானது’ என்று ஸ்க்ரோல் போடும் தொலைக்காட்சிகள் மீது தக்க நடவடிக்கை எடுப்போம்…’’

போலீஸ் ஸ்டேஷன்ல என்ன ஒரே கூட்டம்..?’’
‘‘ஏட்டய்யா தலைமையில ‘திருடர்கள் குறை தீர்க்கும் நாள்’ நடந்துட்டு இருக்கு…’’

‘‘2016ல் நமது ஆட்சி என்று கூறி மக்களையும், ‘நல்ல ஆட்சி’ என்று கூறி நமது கட்சிக்காரர்களையும் பயமுறுத்தும் தலைவர் அவர்களே…’’

நயன்தாரா விஷயம் என் பர்சனல்!

டைரக்டர் விக்னேஷ் சிவன்

‘போடா போடி’க்குப் பிறகு இன்னும் பக்குவமாக, பரபரப்பாக இருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் முழு ஈடுபாட்டோடு உழைக்கிற தாகம், ஆர்வம் கண்ணில் தெரிகிறது. நயன்தாரா நட்பைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் பளீர்… பளீர்… பதில்கள்தான்!

‘‘விஜய்சேதுபதி-நயன்தாரா… இந்தக் காம்பினேஷன்தான் எல்லோரையும் கவர்ந்திருக்கு…’’‘‘காதலை பல வகையிலும் பார்த்துட்டோம். நிறைய ஜாடை மாறியிருக்கணும்னு நினைச்சேன். அப்படியே தரமா வந்திருக்கிறதுதான் எனக்கு சந்தோஷம். எமோஷனல் கதையில் காமெடி ட்ரீட்மென்ட். ஒரு சினிமா அழ வச்சா சிரிக்க முடியாது, சிரிக்க வச்சா அழ முடியாது.

ஆனா, இதில் மொத்தமும் காமெடி கோட்டிங். விஜய்சேதுபதி, ‘நானும் ரவுடிதான்’னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லும்போதே சிரிப்பு வரும். இப்போல்லாம் பேயே காமெடி பண்ணும்போது, ரவுடி ஏன் காமெடி பண்ணக் கூடாது? ஒரு பொண்ணு நமக்குப் பிடிச்சிருந்தா, எதையும் செய்யலாம்னு இறங்கி அடிக்கத் துணிவோம் இல்லையா,

அப்படி ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி வர்றார். அவர்கிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடியே ‘நான் இதுக்கு சரியா வருவேன்னு நம்புறீங்களா’ன்னு கேட்டார். ‘ஓகே’ன்னு சொன்னதும், சடசடன்னு எடையைக் குறைச்சு மீசை, தாடியை எடுத்து இன்னும் இளைஞன் ஆகி வந்தார்!’’

‘‘கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சேதுபதி, ‘நயன்தாராவோட நடிக்க ஆசை’ன்னு சொன்னார்..?’’‘‘நானே இதை அப்புறம்தான் கேட்டேன். முதல்ல இந்தப் படத்தில் வந்தவர் நயன்தாராதான். அப்புறம்தான் விஜய்சேதுபதி கமிட்டானார். இந்தக் கதைக்குத் தேவையான அத்தனை அழகையும் அவங்க ரெண்டு பேரும் கொண்டு வந்து சேர்த்திருக்காங்க.

யார் கூட சேர்ந்து நடிச்சாலும் அவங்ககூட சினிமாவில் ஒரு கெமிஸ்ட்ரி உருவாக்குவதில் நயன்தாரா சிறப்பா இருப்பார். கணிசமா எடை குறைச்சு, வுமன்ல இருந்து ஒரு கேர்ள் தோற்றத்திற்கு அவரால் வரமுடிஞ்சது.

சேதுபதி ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்க்கும் இடையில் கூட வேறுபட்ட நடிப்பைக் கொடுப்பார். அவருடைய சில படங்கள் சரியா போகாமல் இருந்ததற்கு தப்பா செலக்ட் பண்றார்னு சொன்னாங்க. எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. பலரும் ‘எது பாதுகாப்பு’ன்னு பார்த்து, அதை மட்டுமே செய்து ஜெயிக்கறதுல குறியா இருக்காங்க.

ஆனால் அவர் பிடிச்சதை தைரியமா செலக்ட் பண்றார். 55 வயது கேரக்டரை எடுத்துப் பண்ண இங்கே நிறைய பேர் தயங்குவாங்க. அவர் எப்படி நடிச்சாலும் அதில் ஒரு தரம் பார்க்கறார். அவருக்கு வருகிற காமெடி ரொம்ப வித்தியாசம். இன்னும் ஆர்.ஜே. பாலாஜி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன்னு பெரிய செட் இருக்கு!’’

‘‘சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகான்னு பெரும் நடிகர்களை வரவழைச்சிட்டீங்க..?’’‘‘ ‘நானும் ரவுடிதான்’ மசாலா கிடையாது. எமோஷனல் ரொமான்டிக் காமெடின்னு ரத்தினச்சுருக்கமா சொல்லலாம். ராதிகா மேடம் போலீஸா வர்றாங்க.

எங்க அம்மா கூட போலீஸ் வுமன்தான். ஒரு சிங்கிள் மதரா, வீட்டுலயே ஒரு போலீஸைப் பார்த்து வளர்கிற சூழ்நிலை வேற மாதிரி இருக்கும். ராதிகா மேடம் சீக்கிரத்தில் ஒரு படத்தை ஏத்துக்கிறவங்க இல்லை. இந்தப் படத்தில் விசேஷம் என்னன்னா, ஒவ்வொருத்தரும் தங்களோட கேரக்டர் பிடிச்சு நடிக்க முன்வந்தாங்க. பார்த்திபன் இதில் வில்லன்.

அது ஹீரோ மாதிரியான வில்லன் கேரக்டர். அவரெல்லாம் என் ப்ராஜெக்ட்டில் இணைஞ்சதே எனக்கு பெரிய கௌரவம். இப்ப நயன்தாராவுக்கு நல்ல சீஸன். ஜாலியா, பாட்டு, டான்ஸ்னா அதுக்கும் அவங்க ரெடி. ‘ராஜா ராணி’, ‘மாயா’ மாதிரி வேறு விதமான படங்களுக்கும் அவங்க இன்புட்ஸ் ரொம்ப அதிகம். அவங்க இதில் காது கேட்காத கேரக்டரில் வர்றாங்க. அப்படிப்பட்டவங்களோட பிரச்னைகளை அறிஞ்சு செய்த கேரக்டர் அது!’’

‘‘தனுஷ் தயாரிப்பு… அவர் படமென்றால் அனிருத் அதிகம் மெனக்கெடுவாரே..?’’‘‘இதில் அவரது பாடல்கள் எல்லாமே இதயத்திலிருந்து நேரே வந்து பதிவாகியிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடலா வெளியிட்டு அதுக்கு செம ரெஸ்பான்ஸ்.

தாமரை ஒரு பாடலை எழுத, மற்ற பாடல்களை நானே எழுதியிருக்கேன். ஆறு பாடல்கள். மெலடி, குத்துப்பாட்டுனு தனியாக சொல்ல முடியாது. கமர்ஷியல் ஹிட்… அதுதான் என் டார்கெட். என்கூட எல்.கே.ஜியிலிருந்து படிச்ச நண்பன்  ஜார்ஜ் வில்லியம்ஸ்தான் ஒளிப்பதிவு. ‘ராஜா ராணி’க்குப் பின்னாடி அருமை  அருமையா இதைச் செய்திருக்கான்!’’

‘‘தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட் வந்து பார்த்தாரா..?’’‘‘அய்யோ… அவர் இன்னும் படத்தின் ஒரு ஃப்ரேம் பார்க்கலை. ஆரம்ப தினம் அன்னிக்கு வந்து கை குலுக்குகிறவர், அப்புறம் முதல் பிரதி பார்த்துட்டுத்தான் கை கொடுப்பாராம். அதுதான் அவர் ஸ்டைல். அதுகூட நல்லதுதான். கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம். பொறுப்பைக் கொடுத்தால் எப்படி தட்டிக் கழிக்க முடியும்?’’ ‘‘இந்தக் கேள்வி கேட்காம பேட்டி முடியாது! நயன்தாராவுக்கும் உங்களுக்குமான ரிலேஷன்ஷிப் எவ்வளவு உண்மை?’’

‘‘படம் முடிச்சு வெளிவர்ற சமயம் இதெல்லாம் வேண்டாமே… கவனம் அதில்தான் போகும். தவிர, இந்த விஷயம் என் ப்யூர் பர்சனல். அதோட, இது ஒருத்தர் விஷயமில்லை… இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. ஒண்ணு மட்டும் சொல்லியாகணும். என்னையும் அவங்களையும் இணைச்சுப் பேசுறப்ப, கேரளாக்காரன்னு என்னைச் சொல்றாங்க. நான் பக்கா மதுரைக்காரன். ஜெய்ஹிந்த்புரம்தான் நம்ம ஏரியா. மலையாளத்தில் ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரியாது. அதெல்லாம் எதுக்கு? இப்ப, ‘நானும் ரவுடிதான்’ மட்டும்தான் முதல் அட்ராக்‌ஷன் எனக்கு… ப்ளீஸ்!’’

கிளாமர் இல்லனா ஹீரோயினே இல்ல!

ஐஸ்வர்யா ராஜேஷ்

‘‘அட.. ‘காக்கா முட்டை’யில ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்ச பொண்ணா இது?’’ என எவரையும் மலைக்க வைக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட். இப்போதைக்கு சுந்தர்.சி தயாரிப்பில் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘என்றென்றும் புன்னகை’ அஹமது இயக்கத்தில் உதயநிதி படம் என ஓடிக்கொண்டிருக்கிறது பொண்ணு!

‘இடம் பொருள் ஏவல்’, ‘குற்றமே தண்டனை’, ‘தீபாவளி துப்பாக்கி’ என மூன்று படங்கள் ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட ரெடி. சினிமா, பெயர், புகழ் தாண்டி ஃப்ரெண்ட்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐஸ்வர்யாவிடம் ஒரு ஜாலி சாட்!ரிஸ்க் எடுக்கறது இப்ப ட்ரெண்ட்

‘ஃப்ரெண்டுங்க தொல்லை தாங்க முடியல’ என சந்தானம் போல ஃபீல் விட்டவர்கள் எல்லாம் இப்போது புலம்புகிறார்கள். இணையவெளியில் இப்போது ட்ரெண்டுங்க தொல்லை அதை விட மோசம். அதிலும் கர்ண கொடூரமான சேலஞ்சுகள் ட்ரெண்டிங்காக உலவத் துவங்கிவிட்டால் அவ்வளவுதான்! முரட்டுப் பனி பெய்யும் அதிகாலையில் ஒரு பக்கெட் நிறைய ஐஸ் வாட்டரை தலையில் ஊற்றிக்கொண்டு வீடியோ போட்டார்களே… ஐஸ் பக்கெட் சேலஞ்ச்! அதே மாதிரி ‘அவ்வ்வ்’ சேலஞ்ச்கள் லிஸ்ட் இதோ!

பெரிய உதடு சேலஞ்ச் (#kylieJenner lipchallenge)

அமெரிக்க டி.வி நடிகை கைலி ஜென்னர் தனது உதடுகளை ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் பெரிதாக்கினார். ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என அவர் பழைய – புதிய படங்களைப் போட… அது அவர் பெயரிலேயே பெரிய ட்ரெண்டிங்காக பற்றிக் கொண்டது. ‘பெரிய உதடுகளுக்கு எதற்காக சர்ஜரி?

ஒரு பாட்டிலுக்குள் உதடுகளை நுழைத்து காற்றை உறிஞ்சினாலே நம் உதடு உள்ளே இழுக்கப்பட்டு பெரிதாக வீங்கிப் பழுத்துவிடுமே’ என இளம் பெண்கள் பலர் டெமோ காட்டினார்கள். அப்படி உதட்டைப் புண்ணாக்கி பெரிதாக்கி செல்ஃபி எடுத்து வெளியிடும் ட்ரெண்ட் இன்றுவரை ஸ்நாப்சாட், இன்ஸ்டாகிராம், மற்றும் ட்விட்டரில் உயிர்த்திருக்கிறது!‘அசிங்கமாவோம் வா’ சேலஞ்ச் (#DontJudgeChallenge)அழகான பொண்ணுங்க காறித் துப்பினா கூட வாரி வாரி லைக் போடுகிற உலகம் இது.

இதில் கடுப்பாகிற முதல் வர்க்கம் சுமார் மூஞ்சி குமாரிகள். இரண்டாவது வர்க்கம், ‘எனக்கு லைக்கே விழல’ எனும் ஆங்கிரி பாய்ஸ். இவர்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய ட்ரெண்ட்தான் இது. அதாவது முடிந்தவரை தங்கள் முகத்தை அசிங்கமாக்கி செல்ஃபி எடுத்துப் போடுவது. முகம் முழுக்க தழும்புகள், கறை படிந்த பற்கள், கொடூர முகச் சுருக்கங்கள் என இந்த ‘அக்ளி மேக்கப்’ அநியாயத்துக்கு மிரட்டும். ‘‘அது என்ன மூஞ்சியப் பார்த்து ஆளை எடை போடுறது?’’ எனக் கொதித்தவர்கள் இதற்கு #DontJudgeChallenge என்றே பெயர் வைத்து பரப்புகிறார்கள். கடந்த ஜூலை மாதம் முதல் பிறப்பெடுத்து பிரவாகம் ஆகியிருக்கிறது இந்த சவால் ட்ரெண்ட்!

தோளுல காசு சேலஞ்ச்! (#collarbone challenge)

இது சீனாவில் துவங்கியது. சீன நடிகை லிவ் ஜியாராங் தனது காலர் போன்… அதாவது நெஞ்சாங்கூட்டின் மேல் தொண்டையில் இருந்து தோள் வரை செல்லுமே அந்த விலா எலும்பில் இருக்கும் பள்ளத்தில் வரிசையாய் உலோக நாணயங்களை அடுக்கி வைத்து ஒரு செல்ஃபி எடுத்தார். அவ்வளவுதான்… ‘காலர் எலும்பில் எத்தனை காயின்களை அடுக்க முடியும்?’ என இதுவே ஒரு போட்டியாகிவிட்டது. கொஞ்சம் பூசின உடம்பென்றால் இந்த விலா எலும்பு கண்ணுக்கே தெரியாது. ஆக, ஒல்லி பெல்லி உடலமைப்பைப் பெற்ற பெண்களுக்கு மட்டுமேயான வீர விளையாட்டு இது. ‘நாங்களும் ஸ்லிம் ஃபிட்டா இருக்கோம்ல’ எனக் காட்டிக் கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து திரளாக பெண்கள் இந்தப் போட்டிக்கு போட்டோ போடுகிறார்கள்!

தொப்புளைத் தொடு சேலஞ்ச்! (#BellyButton Challenge)

அட, தொப்புளைத் தொடமுடியாதா? என அசட்டை ஆகாதீங்க. கையை முதுகுக்குப் பின்னால் சுற்றி தொப்புளைத் தொட வேண்டும். இதுவும் மெல்லிய பெண்களுக்கான போட்டிதான். துவங்கிய இடம் அதே சீனாதான். ‘‘ஏற்கனவே பெண்கள் ஒல்லி உடம்புக்காக சாப்பிடாமல் ஊட்டச்சத்தை இழக்கிறார்கள், இது இது வேறயா?’’ என சமூக ஆர்வலர்களின் கோபத்துக்கு இது ஆளானது. ஆனால், ‘‘இப்படி தொப்புளைத் தொட ஒல்லி உடம்பு தேவையில்லை. தோளின் வளைவுத்தன்மைதான் முக்கியம். அந்த விதத்தில் இது ஜிம்னாஸ்டிக்கை ஊக்குவிக்கிறது’’ என சப்பைக் கட்டு கட்டி சமாளித்துவிட்டார்கள்.

அமுக்கிப்புடி சேலஞ்ச்! (#extremephonepinch)

இப்போதைக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் அனைத்திலும் ஹாட் இதுதான். ஆப்பிள் ஐ போன், சாம்சங் எஸ்6 போன்ற காஸ்ட்லி மொபைல்களை இரண்டே விரல்களால் இடுக்கிப் பிடித்தபடி நிற்பது. இதில் என்ன த்ரில் என்கிறீர்களா? உயரிய கட்டிடம், ஆபத்தான மலை விளிம்பு என எங்கிருந்தாவது பள்ளத்தாக்கை நோக்கி அந்த போனை பிடித்திருப்பார்கள். மலையுச்சிதான் என்றில்லை… ஓடும் ஆறு, வீட்டு டாய்லட், தெருக் கால்வாய் என எதன் மீது வேண்டுமானாலும் போனைத் தூக்கிப் பிடிக்கலாம். விட்டால் போச்சு… இதுதான் கான்செப்ட்!

இந்த சேலஞ்ச்கள் தவிர, ‘ஒரு டேபிள்ஸ்பூன் லவங்கப்பட்டை பவுடரை தண்ணீர் குடிக்காமல் விழுங்க முடியுமா?’ எனும் Cinnamon challenge, ‘ஆறு சால்ட் பிஸ்கட்டுகளை அப்படியே விழுங்கிக் காட்டும்’ Saltine cracker challenge, ‘சுமார் நாலு லிட்டர் பாலை வாந்தி எடுக்காமல் ஒரே மடக்கில் குடித்துக் காட்டும்’ gallon challenge, ‘இரண்டு வாழைப்பழத்தையும் ஒரு டின் ஸ்ப்ரைட்டையும் சீக்கிரத்தில் உள்ளே தள்ளிக் காட்டும்’ Banana Sprite challenge…

இப்படி அள்ள அள்ளக் குறையாமல் வருகின்றன உணவு சவால்கள். இவற்றை முயற்சிக்கும் பலர் மூச்சுத் திணறி ஐ.சி.யூவுக்கு போவதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் இந்த சேலஞ்ச்களுக்கு இளசுகளிடையே மவுசு குறைவதில்லை. யூ டியூபில் மட்டுமே இப்படிப்பட்ட சவால் வீடியோக்கள் 30 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.‘இதுதான் இப்ப ட்ரெண்ட்’ எனச் சொன்னால் எந்த ரிஸ்க்கையும் எடுக்க இளைஞர்கள் தயார்தான் போல!

தயாராகுது தல சட்டை!

கொண்டாடும் கோவில்பட்டி

‘‘அஜித்தின் ‘வேதாளம்’ எப்போ ரிலீஸ்?’’ எனக் கேட்க வேண்டிய தல ரசிகர்களை, ஒரு சட்டை ரிலீஸுக்காக காக்க வைத்திருக்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் முருகன். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் இந்தச் சட்டை பரவிப் படர்கிறது.

இதற்கு அட்வான்ஸ் புக்கிங் வேறு. அப்படியென்ன இதில் விசேஷம் என்கிறீர்களா? அஜித்தின் வாழ்க்கை வரலாறு தொடங்கி சினிமா பயணம் வரை சகலமும் இந்தச் சட்டையில் புள்ளிவிவரங்களோடு எழுத்துக்களால் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். பின்புறத்தில் ‘தல 56’ என்கிற வாசகமும், அஜித் உருவமும் செமயாய் பின்னியெடுக்கும்!

‘‘எனக்கு சொந்த ஊர் சாத்தூர் பக்கத்துல ஒத்தையால்னு ஒரு குக்கிராமம் சார். ஃபேஷன் டிசைனிங்ல ரொம்ப ஆர்வம். படிப்பு முடிஞ்சதும் ‘Front page fashion house’னு கடை ஆரம்பிச்சேன். அதுல, நானே புதுசா டிசைன் பண்ணி உடைகளை தைத்து வித்துட்டு இருக்கேன். எங்கிட்ட பத்து பேர் வேலை பாக்குறாங்க.

‘இப்படி வேணும்’னு கேட்குறவங்களுக்கும் தனியா டிசைன் செஞ்சு கொடுக்குறது என்னோட வழக்கம். குறிப்பா, பள்ளிகள்ல போட்டிகள் நடக்கும்போது நிறைய பேர் வந்து கேட்பாங்க. அவங்களுக்கு வித்தியாசமா உடைகளை டிசைன் பண்ணிக் கொடுப்பேன். தொடர்ந்து, ஸ்கூல் யூனிஃபார்ம் ஆர்டர்ஸ் கிடைச்சது. அதுலயும் காலர், பாக்கெட்னு தனித்துவமா சில விஷயங்களைப் பண்ணினேன். இப்படியேதான் போயிட்டிருந்தது வாழ்க்கை.

இது, தீபாவளி நேரம்ங்கிறதால புதுசா டிசைன் யோசிச்சு பண்ணிட்டு இருந்தேன். அப்போ, திடீர்னு இந்த ஐடியா உதிச்சது. இதுவரைக்கும் பெரிய ஹீரோக்களோட போட்டோக்களைத்தான் சட்டையில பிரின்ட் பண்ணியிருக்காங்களே தவிர, அவங்களைப் பற்றிய முழு விவரங்களையும் கோர்த்து பிரின்டட் ஷர்ட் யாரும் செய்ததில்லை. ஸோ, வித்தியாசமா இருக்கும்னு நினைச்சேன். நினைச்சபடியே வொர்க் அவுட் ஆகியிருக்கு!’’ என்கிற முருகனுக்கு இப்போதே ஐந்நூறு சட்டைகளுக்கு மேல் ஆர்டர் குவிந்திருக்கிறதாம். ஒரு சின்ன கடைக்கு இது எதிர்பாராத எண்ணிக்கையாச்சே. அதனால் தயாரிப்பு வேலைகளை மும்முரப்படுத்தியிருக்கிறாராம்.

‘‘இந்தச் சட்டையில 1971ம் வருஷம் அஜித் பொறந்ததுல தொடங்கி சினிமாவுக்கு வந்த கதை, ெபற்றோர் பெயர், குடும்பம்னு எல்லாம் அச்சிட்டு இருக்கும். அப்புறம், அவர் நடிச்ச படங்கள் எல்லாத்தையும் போட்டிருக்கோம். அந்தந்த படங்களோட டைரக்‌டர் பெயர், அந்தப் படம் பண்ணின சாதனைகள் பற்றின விஷயங்கள்னு எல்லாம் இதில் அடங்கியிருக்கும்.

சட்டை முன்பக்க கை மேல அல்டிமேட், சூப்பர்ங்கிற வார்த்தையும், பின்னாடி ரேஸர், ஆக்டர்னும் எழுதி ‘தல’ படத்தை பெரிசா வச்சிருக்கோம்!’’ என்கிற முருகன் இந்தச் சட்டைக்கு 399 ரூபாய் என விலை நிர்ணயித்திருக்கிறார். எல்லோருக்கும் பொருந்தும் விதவிதமான சைஸ்களில் இது கிடைக்குமாம். ‘‘ஒருவேளை இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனா, மத்த நடிகர்களுக்கும் இது மாதிரி டிசைன் பண்ணலாம்னு இருக்கேன். பார்க்கலாம்!’’ என்கிறார் இந்த இளைஞர் நம்பிக்கையாக!

சச்சின்கிட்ட பாடம் படிச்ச ஏகலைவன் நான்!

தமிழ்நாடு கேப்டன் ‘சச்சின்’ சிவா

‘‘கிரிக்கெட்தான் என் சுவாசம், வாழ்க்கை, எல்லாமே!’’ – நம்பிக்கை பொங்கப் பேசும் சிவக்குமார், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கும் மதுரைக்காரத் தம்பி! எல்லோருக்கும் செல்லமாக ‘சச்சின்’ சிவா!  ‘மேன் ஆஃப் தி சீரிஸ்’, ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ என பல விருதுகளைப் பெற்று தமிழ்நாட்டு அணிக்கு பெருமை சேர்த்திருக்கும் இவர், இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் என பல பொறுப்புகளை வகிக்கிறார். ‘‘அட, இப்படியொரு பேரை பேப்பர்ல படிச்சதில்லையே’’ என்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில், சிவா இடம் பிடித்திருப்பது இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியில்!

வருமானத்திற்காக ‘சச்சின் சிவா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் ஃப்ளக்ஸ் போர்டு டிசைன் கடையை நடத்தி வருகிறார் இந்த தமிழ்நாடு கேப்டன். எந்த சக்தி வாய்ந்த அமைப்பும், ஸ்பான்சர்ஷிப்பும் இல்லாமல் தடுமாறும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியை அசராமல் வழிநடத்தும் ஆல்ரவுண்டர் இவர்!

‘‘எனக்கு சொந்த ஊரே மதுரைதான். அப்பா பேரு செல்லம். லாரி டிரைவர். அம்மா தமிழரசி. நான், வீட்டுக்கு ஒரே பையன். ஆறு மாசக் குழந்தையிலயே எனக்கு போலியோ அட்டாக். கால்ல நாற்பது சதவீத அளவு ஊனம். அப்பாவும் அம்மாவும் நொடிஞ்சு போயிட்டாங்க. ஆனாலும், எனக்கு எந்தக் கவலையும் தெரியாம வளர்த்தாங்க.

சின்ன வயசுல இருந்தே எனக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சச்சின் ஆடுறதை டி.வியில பார்த்தா சாப்பாடு, தூக்கம் எல்லாம் மறந்துடும். அவர்தான் என் மானசீக குரு. ஏகலைவன் மாதிரி அவர் விளையாட்டை சி.டியில போட்டுப் பார்த்து ப்ராக்டீஸ் செய்வேன். ஆனா, ‘உன்னால முடியாது’ன்னு சொல்லி நார்மல் பசங்க யாருமே என்னை விளையாட்டுல சேர்த்துக்க மாட்டாங்க. ஆனா நான் ‘முடியும்’னு நிரூபிச்சுக் காட்டினேன். நல்லா ஓட முடியிற பசங்க மத்தியிலயே சரிக்கு சமமா நின்னு அசரடிப்பேன்!

பதினேழு வயசுல ஒரு லோக்கல் டீம்ல சேர்ந்தேன். அங்க என்னை சப்ஸ்டிடியூட்டா வச்சிருந்தாங்க. ஒருநாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வராததால என்னை இறக்கிவிட்டாங்க. அப்போ, 52 ரன் அடிச்சு அதகளப்படுத்திட்டேன். உடனே, என்னை நிரந்தரமா அணிக்குள்ள சேர்த்துக்கிட்டாங்க. ஆனா, வீட்டுல நான் கிரிக்கெட் ஆடுறதே பிடிக்காது. இதுவரை பதினாறு பேட்டை உடைச்சிருக்காங்க. அதுக்கெல்லாம் அசர்ற ஆளா நான்?’’ என்கிறார் சிவா சிரித்தபடி!

‘‘2006ல வக்ஃப் போர்டு காலேஜ்ல பி.காம் சேர்ந்தேன். அந்நேரம், மதுரையில மாற்றுத்திறனாளிகள் அத்லெடிக் பயிற்சியாளரா ரஞ்சித் குமார் சாரை நியமிச்சாங்க. அவரோடு சேர்ந்து ஜாவலின் த்ரோ, டிஸ்கஸ் த்ரோ எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். அதுலயும், தேசிய அளவுல கோல்ட் மெடல் அடிச்சேன். ஆனா, கிரிக்கெட்தான் கனவா இருந்துச்சு. சென்னையில ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் தலைவர் நாகராஜன் சார் தலைமையில கிரிக்கெட் செலக்‌ஷன் நடந்துச்சு.

அதுக்கு மதுரையிலிருந்து செலக்ட் ஆன மூணு பேர்ல நானும் ஒருத்தன். அதுக்கு அப்புறம்தான் என்னோட கனவு நனவாக ஆரம்பிச்சது. 2007ல ஆந்திராவுல ஸ்டேட் மேட்ச். மதுரைப் பசங்க நாங்க எல்லாருமே சப்ஸ்டிடியூட்டா இருந்தோம். டீமுக்கு பெரிய தோல்வி! இதை நாகராஜன் சார் கவனத்துக்குக் கொண்டு போனேன்.

அவர், ‘இனி மதுரையில நிறைய பேர் எடுப்போம்’னு நம்பிக்கை கொடுத்தார். அப்புறம், மாவட்டங்களை ஒருங்கிணைச்சு ஒரு போட்டி நடத்துனாங்க. இதுல, மதுரை டீம் ‘வின்’ பண்ணுச்சு. நாகராஜன் சார் நேர்ல வந்திருந்து எங்க ஆட்டத்தைப் பார்த்தார். அசந்துபோய், ‘நீங்களே.. தமிழ்நாட்டு டீமை வழிநடத்துங்க’ன்னு சொல்லிட்டார். 2008ல் தமிழ்நாடு டீம் கேப்டன் ஆனேன்.

பாண்டிச்சேரியில நடந்த தென்னிந்தியக் கிரிக்கெட் மேட்ச்ல ரெண்டாவது பரிசு வாங்கினோம். அடுத்த வருஷம் முழு டீம் கன்ட்ரோலையும் எங்கிட்ட கொடுத்துட்டாங்க. அப்புறம் தொடர்ச்சியா, மூணு தடவை தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வாங்கிச்சு.

இந்த வருஷமும் தமிழ்நாடுதான் சாம்பியன். நான், 32 பந்துல 84 ரன் அடிச்சு ஜெயிக்க வச்சேன். 2010ல இருந்து இப்போ வரை தொடர்ந்து ‘மேன் ஆஃப் தி சீரிஸ்’ வாங்கிட்டு வர்றேன். இதனாலதான் இந்த ஏப்ரல்ல இந்திய அணி வாய்ப்பு எனக்குக் கெடைச்சது. உடனே, பாகிஸ்தான் போற சான்ஸ் வேற! ஆனா, பயிற்சி ஆட்டத்தின்போதே அங்க குண்டு வெடிச்சு டூர் கேன்சலாகிடுச்சு. வர்ற டிசம்பர் மாசம் பாகிஸ்தான் டீம் இந்தியா வர்றாங்க. அதுக்கான பயிற்சியில இருக்கேன்’’ என்கிறவர், சில வருத்தமான விஷயங்களைப் பகிர்கிறார்…

“இவ்வளவு தூரம் நான் போய் பேர் வாங்கினாலும் இதுல காசுனு எதுவும் பார்க்கலை. தமிழ்நாடு டீம்னுதான் பேரு… ஆனா, டீம் முழுக்க என்னோட ஒரே ‘கிட் பேக்’கைத்தான் யூஸ் பண்ணிட்டு இருக்கோம். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டுக்குன்னு எந்த அசோஸியேஷனும் கிடையாது. நாங்கதான் அதையும் உருவாக்கினோம்.

மேட்ச்சுக்கு எங்க கைக்காசு போட்டுதான் போவோம். ஆனா, நார்மல் கிரிக்கெட்ல ரஞ்சி விளையாடுற வீரர்களுக்குக் கூட நல்ல பணம் கிடைக்குது. இத, வருத்தமா சொல்லலை. எங்களுக்கு சம்பளமும் கேட்கலை. மேட்ச்சுக்கு போயிட்டு வர்ற செலவுக்குக் காசு கிடைச்சா போதும். அதுவே இல்லங்கிறப்போ கஷ்டமா இருக்கு. ஆதரவு இருந்தா, இன்னும் டீமை முன்னாடி எடுத்துட்டுப் போகலாம். சிறந்த மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியா தமிழ்நாட்டைக் கொண்டு வரலாம்!’’ என்கிறார் சிவா நிறைவாக!

மாற்றுத் திறனாளிகள்  கிரிக்கெட்டுக்குன்னு எந்த அசோஸியேஷனும் கிடையாது. மேட்ச்சுக்கு எங்க கைக்காசு போட்டுதான் போவோம்.