வந்தாச்சு மார்ஷ்மல்லோ
ஏ பி சி டி வரிசையில் குழந்தைகளுக்குப் பிடித்ததொரு உணவுப் பெயரைத்தான் ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு வைப்பது வழக்கம். I-ஐஸ்கிரீம் சாண்ட்விச், J-ஜெல்லிபீன், K-கிட்கேட், L-லாலிபாப் என வரும் அந்த வரிசையில் அடுத்த ‘M அப்டேட்’ என்னவாக இருக்கும் என்று ஒரு வருடமாக தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தது உலகம். சுந்தர் பிச்சை கூகுளுக்கு தலைமை ஏற்றதும் அது ‘மாங்காய் பச்சடி’ என்று கூட ஆருடம் சொன்னார்கள். கடைசியில் அது ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ. ஒரு வகை ஃபாரின் மிட்டாய் இது!
இதுவரை வந்த ஆண்ட்ராய்டு பதிப்புகளிலேயே மிகமிகத் தாமதமாக செயல்பாட்டுக்கு வரும் பதிப்பு இதுவாகத்தான் இருக்கும். கடந்த அக்டோபர் 5 அன்றே ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ வெளியாகிவிட்டது. கூகுளின் சொந்தத் தயாரிப்பான நெக்சஸ் போன்கள் மற்றும் டேப்லெட்கள் தவிர வேறெதிலும் இன்றுவரை மார்ஷ்மல்லோ அப்டேட் இல்லை. வருகிற டிசம்பர் மாதம் எல்.ஜி நிறுவனம் வெளியிடவிருக்கும் G4 போன்களில் மார்ஷ்மல்லோ இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வந்தால் அதுதான் கூகுள் அல்லாத வெளி நிறுவனத்தின் முதல் மார்ஷ்மல்லோ போன்!
‘இதற்கு முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்பான லாலிபாப்பே இன்னும் முழுமையாகப் புழக்கத்துக்கு வரவில்லை. அதற்குள் இன்னொன்றா?’ என்பது ஆண்ட்ராய்டு விமர்சகர்களின் ஆச்சரியம். ‘அந்தளவுக்கு இதுல புது விஷயம் இருக்குய்யா’ என்பது ஆண்ட்ராய்டு ஆர்வலர்களின் ஆன்ஸர். அப்படி என்ன புதுசு..?
* அசிஸ்டன்ட் எனும் அப்ளிகேஷனை மார்ஷ்மல்லோ பதிப்பில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆண்ட்ராய்டு. இது நம் பார்வைக்கே வராது. ஆனால், எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும். நாம் பயன்படுத்தும் ஆப், அதில் நாம் டைப் செய்யும் சங்கதிகள் என சகலத்தையும் கண்காணித்து நினைவில் வைத்திருப்பதுதான் இதன் வேலை. இதன் மூலம் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என நம் ஸ்மார்ட் போன் அறிந்திருக்கும்.
இந்த நேரத்தில் இவன் என்ன கேட்பான் என நோக்கம் அறிந்து நம் தேடுபொறி செயல்படும். உதாரணத்துக்கு, மைக்கேல் ஜாக்சனின் பாடலை நீங்கள் போனில் கேட்டுக்கொண்டிருக்கும்போது, கூகுள் குரல்வழித் தேடலில், ‘யாரு இவரு?’ எனக் கேட்டால் போதும்… நீங்கள் மைக்கேல் ஜாக்சன் பற்றித்தான் கேட்கிறீர்கள் எனப் புரிந்துகொண்டு அது தேடல் முடிவுகளைத் தரும்.
* பொதுவாக ஆண்ட்ராய்டு போன்களில் இன்டர்னல் மெமரி என்பது போனுடனே வரும் நினைவகம். நாம் போடும் மெமரி கார்டு, எக்ஸ்டர்னல் மெமரியாகத்தான் செயல்படும். இதில் போட்டோ, வீடியோ, பாடல்கள் போன்றவற்றை சேமிக்கலாமே தவிர, இன்டர்னல் மெமரியை இதன்மூலம் நீட்டிக்க முடியாது.
ஆனால், இந்த மார்ஷ்மல்லோ பதிப்பில் ஒரு மெமரி கார்டை போனில் நுழைத்ததுமே, அதை இன்டர்னல் மெமரியாக ஏற்க வேண்டுமா? எக்ஸ்டர்னல் மெமரியாக ஏற்க வேண்டுமா? என அதுவே கேட்கும். ‘இன்டர்னல் மெமரி’ என்று கொடுத்துவிட்டால் உங்கள் போனின் இன்டர்னல் மெமரியே நீட்டிக்கப்பட்டுவிடும். 32 ஜிபி மெமரி கார்டு போட்டால் அத்தனையிலும் கிலோ கணக்கில் ஆப்களை இறக்கி ஆனந்திக்கலாம்!
* பொதுவாக ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யும்போது, நம் போனில் உள்ள சகலத்தையும் பயன்படுத்திக் கொள்ள அது அனுமதி கேட்கும். அதைப் படித்துக்கூடப் பார்க்காமல் ‘accept’ பட்டனை அழுத்துவதுதான் நம் பாரம்பரியம். ஆனால் இந்தப் பதிப்பில் இருந்து, எது எதுக்கெல்லாம் பர்மிஷன் கொடுக்க வேண்டும், வேண்டாம் என நாம் தீர்மானிக்கலாம். உதாரணத்துக்கு, ‘ஒரு செய்தி ஆப்… நம் போனின் கேமரா, மைக் போன்றவற்றை எதற்காகப் பயன்படுத்த வேண்டும்? நம்மை உளவு பார்க்கவா?’ என உங்களுக்கு சந்தேகம் வந்தால் அனுமதியை கட் செய்துவைக்கலாம்.
* ஸ்மார்ட் போன் என்றாலே பேட்டரிதான் பிரச்னை. அதை மிச்சப்படுத்துவதற்காகவே ‘டோஸ்’ (Doze) எனும் பவர் மேனேஜ்மென்ட் முறை மார்ஷ்மல்லோவில் உள்ளது. செல்போனை நாம் கையில் எடுக்காத நேரத்தில் இது மறைமுக செயல்பாடுகளைக் குறைத்து முடிந்தவரை பேட்டரியை சேமிக்கிறது.
* நேரடியான கைரேகை சென்ஸார் சப்போர்ட் இந்த ஆண்ட்ராய்டு பதிப்பில் உண்டு. இதனால், இனி வரும் போன்கள் எல்லாமே கைரேகை கொண்டு உரியவர் மட்டும் அன்லாக் செய்யும் வண்ணம் வரும். அது தவிர, இனி மற்ற ஆப்களுக்கும் கைரேகை அடையாளத்தைப் பயன்படுத்தலாம். ஸோ, வங்கிகளின் ஆப்கள் ஒரு பணப்பட்டுவாடா செய்ய ‘கைரேகையை வை’ எனச் சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
* யு.எஸ்.பி. தொடர்பைப் பொறுத்தவரை type C எனும் வகையை இந்தப் பதிப்பு பயன்படுத்துகிறது. இதன்மூலம் ஒரு போனிலிருந்து இன்னொரு போனுக்கு பேட்டரி சார்ஜைப் பகிர முடியும்.
* இனி மார்ஷ்மல்லோவை குறி வைத்துத் தயாரிக்கப்படும் ஆப்கள் எல்லாம், தமது தகவல்களை பேக் அப் எடுத்து வைக்க கூகுள் டிரைவை பயன்படுத்திக் கொள்ளும். அதற்கான வசதி இந்தப் பதிப்பில் தரப்பட்டுள்ளது.
அப்படி கூகுள் டிரைவைப் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆப்க்கும் 25 எம்.பி வரை இலவச இடம் தந்திருக்கிறது கூகுள். ஆக, இனி போனை மாற்றி, அதில் இருக்கும் மெமரி கார்டையும் சேர்த்து மாற்றினால் கூட நமது ஜிமெயிலில் நுழைந்தவுடன் பழைய ஆப்கள் பழைய மாதிரியே திரும்பி வந்துவிடும். தகவல்களும் கூட!
மொபைல் உலகை அப்படியே புரட்டிப் போடும்படியான அம்சங்களை ஆப்பிள் ஐ.ஓ.எஸ்9 பதிப்பில் எதிர்பார்த்தார்கள்… நடக்கவில்லை. ஆனால், புரட்டும்படி இல்லை என்றாலும் லேசாக முன்னோக்கி நகர்த்தும்படியான மாற்றங்கள் மார்ஷ்மல்லோவில் உள்ளன. லாலிபாப்புக்கே தயாராகாத இந்திய செல்போன் கம்பெனிகள் இதை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் ஆட்டம் சூடு பிடிப்பது இருக்கிறது! நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே… நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே!