மழைக்காலம்… வாகனங்களைப் பராமரிப்பது எப்படி?

மழைக்காலம்… வாகனங்களைப் பராமரிப்பது எப்படி?

‘‘ரிப்பேருக்கு வந்த ஒரு டூ வீலர்ல ஏர் ஃபில்டரை கழட்டி பார்த்தா… குட்டி தண்ணிப் பாம்பு சுருண்டு கிடக்குது!’’‘‘ஸ்கூட்டரைக் கழட்டினா உள்ள தவளைக் குடும்பமே இருக்கு!’’ கடந்த வாரம் முழுக்க சென்னையின் மெக்கானிக் ஷெட்டுகளில் இப்படித்தான் பகீர் பேச்சுகள். மழை நீரில் ஆயிரக்கணக்கான மோட்டார் வாகனங்கள் மூச்சு பேச்சில்லாமல் போக, ஐ.சி.யூ பேஷன்ட்டுகள் போல அவை அழைத்துவரப்பட்டது இங்கேதான்.

மற்ற நாளெல்லாம் ஒரு கஸ்டமர் பார்ப்பதே கஷ்டம் என்றிருந்த மெக்கானிக்குகள் கூட ‘‘முடியல சார், வேற ஷெட் பார்த்துக்குங்க!’’ என விரட்டும்படி ஆகிவிட்டது நிலைமை. இந்த நிலைமையைத் தவிர்க்க… மழையிடமிருந்து நம் வாகனங்களைப் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்… நிபுணர்களிடம் கேட்டோம்!

டூ வீலர்என்.எஸ்.செல்வன், மேனேஜர், டிடார் மோட்டார்ஸ், சென்னை.

* மழைக் காலம் ஆரம்பிக்கும் முன்னாடியே வண்டியின் டயரையும், பிரேக்கையும் ஒரு முறை செக் அப் பண்ணிடறது நல்லது. மழையில் பிரேக் பிடிக்காமல் போறதும் டயர் வழுக்குறதும் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம்.

* மழைக் காலத்துல வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தாதீங்க. ஈர மண்ல ஸ்டாண்ட் இறங்கி வண்டி கீழ விழந்திடும். அப்போ, இண்டிகேட்டர், ெஹட்லைட், சைடு பாடி பேனல் எல்லாம் சேதமாகி செலவு வச்சிடும். இந்த மாதிரியான கேஸ் நிறைய வருது.

* முடிஞ்ச வரை மழை நீர் படாத மாதிரி இடத்துலயோ அல்லது கவர் போட்டு மூடியோ வண்டியை நிறுத்துங்க. மழையில் நின்னா ஸ்பீடோ மீட்டர், எலக்ட்ரிக் ஸ்விட்ச்கள், லைட்டுகள்… ஏன், பெட்ரோல் டேங்க் வரை தண்ணி புகுந்து பிரச்னை தர வாய்ப்பிருக்கு.

* ஏர் ஃபில்டர், ஸ்பார்க் பிளக், கார்பரேட்டர் இந்த மூணு பகுதியிலும் மழை நீர் அடைச்சு வண்டி ஆஃப் ஆகும். இந்த கேஸ்கள் மழைக்காலத்துல ரொம்ப அதிகம். வண்டியில இருக்கிற டூல் கிட்டை வச்சு இந்த மூன்றையுமே கழட்ட முடியும். கழட்டி துடைச்சி மாட்டினாலே வண்டி ஸ்டார்ட் ஆகிடும். கார்பரேட்டரைப் பொறுத்தவரை கார்பரேட்டர் கப்புக்குக் கீழ ட்ரைன் ஸ்க்ரூ ஒண்ணு இருக்கும். அதைத் திருகினாலே இந்த கப் கழண்டு வந்திடும். அதுல இருக்குற ஈரத்தைத் துடைச்சிட்டு மாட்டினா வண்டி இயங்க சான்ஸ் இருக்கு.

* சிலர் வண்டியின் சைலன்ஸர்ல நீர் போயிருச்சேனு பயப்படுவாங்க. ஆனா, பெரும்பாலான வண்டி சைலன்ஸர்கள்ல நீர் வெளியேற சின்ன ஓட்டை வச்சிருப்பாங்க. அது வழியா நீர் வெளியேறிடும். தண்ணி இல்லாத இடத்துல கொஞ்ச நேரம் நாம வண்டியை நிறுத்தினாலே போதும்.

* பொதுவா, எஞ்சின் மூழ்குற அளவு தண்ணீர்ல போகும்போது வண்டி ஆஃப் ஆகிடுச்சுன்னா, அங்கேயே ஸ்டார்ட் பண்ண முயற்சிக்கக் கூடாது. இதனால இன்னும் அதிக தண்ணீர் எஞ்சினுக்குள்ள போக வாய்ப்பு இருக்கு. உருட்டிக்கிட்டே வண்டியை நீர் இல்லாத பகுதிக்கு கொண்டு வந்து ஸ்டார்ட் பண்ணணும். கார்சின்னராஜா, மாருதி சர்வீஸ் மாஸ்டர், சென்னை

* இந்த மழைக்கு மட்டும் 45 வண்டிகளை சரி பண்ணியிருக்கோம். பெரும்பாலானவங்க ‘கியர் ஷிஃப்ட்டிங் ப்ராபளம்’னு வந்தாங்க. அதாவது, வண்டியின் கிளட்ச் ஜாம் ஆகிடும். அதனால, கியர் விழாது. ஆரம்பத்தில் ஃபர்ஸ்ட் கியர் போட்டு லேசா மூவ் பண்ணிப் பார்த்தால் இந்த பிரச்னை சரியாக வாய்ப்பிருக்கு. இந்த முதலுதவியை மக்களே செய்து பார்க்கலாம்.

* மழைக்காலத்துல வர்ற கார் பிரச்னைகளை நாங்க ஏ, பி, சினு மூணு வகையா பிரிக்கிறோம். ‘ஏ’ வகை, எஞ்சின், சீட், சென்சார் சிஸ்டம் வரை மழையால பாதிக்கப்பட்டுருச்சுனு வர்ற கேஸ்! இதுல வாடிக்கையாளரால வண்டியை எடுக்கவே முடியாது.

ஒவ்வொரு கம்பெனி வண்டிக்கும் ஒரு தனிப்பட்ட ஹெல்ப் லைன் நம்பர் இருக்கும் (மாருதிக்கு 1800 102 1800). அதுக்கு டயல் பண்ணினா, அந்த சுற்று வட்டாரத்துல இருக்கிற டீலர், 35 நிமிஷத்துல மெக்கானிக்கை அனுப்பிடுவார். அங்கேயே சரி பண்ண முடிஞ்சா செய்திடுவோம். இல்லன்னா, சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு வருவோம். ரொம்ப சேதம்னா, இன்சூரன்ஸ் க்ளெயிம் பண்ணி பணம் கூட வாங்கிடலாம்.

* அடுத்து ‘பி’ வகையில சீட் லெவல் வரை தண்ணி வந்துடும். இதுல, வண்டி பெரும்பாலும் ஸ்டார்ட் ஆகிடும். கஸ்டமரே வண்டியை கடைக்கு எடுத்துட்டு வந்துடலாம்.

* அப்புறம், சி லெவல்ல கார்ப்பெட் வரை நீர் புகுந்திருக்கும். இதிலும் கார்ப்பெட்டை கழட்டிட்டு வண்டியை கடைக்கு எடுத்துட்டு வரலாம்.

* பொதுவா, ஃபோர் வீலரை எப்படி சரி பண்ணணும்னு நிறைய பேருக்குத் தெரியாது. அதனால, கூடுமானவரை ஹெல்ப் லைனுக்கு கூப்பிடுறது நல்லது. ஹெல்ப் லைன் நம்பரே தெரியாதுனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அதைத் தெரிஞ்சு வச்சிருக்கிறதுதான் முக்கியமான டிப்ஸ்!

நான் உங்கள் ரசிகன் : மனோபாலா

என்னோட திருமண விஷயம் பத்தி இதுவரை, நெருக்கமான சினிமாக்காரங்க பல பேர்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, மீடியாவில பகிர்ந்துக்கறது இதுதான் முதல் தடவை. தாலி கட்டிட்டு மாலையும் கழுத்துமா வந்து நிக்கும்போதே எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னா ஊர் என்ன சொல்லும்? ‘‘இந்தப் பொண்ணு வந்த நேரம் மாமனாரை சாய்ச்சுப்புட்டா’னு ஆளாளுக்கு பேச, என் மனைவி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.

இப்பவும் நான் மனைவிகிட்ட பேச சந்தர்ப்பம் வாய்க்கல! உடனடியா ஒரு வண்டியைப் பிடிச்சி அப்பாவை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிப் போறோம். ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர், ‘‘ஒண்ணும் பயமில்ல… நல்லா இருக்கார்’’னு சொன்னதும்தான் இன்னொரு அவசரம் எங்களுக்கு உறைக்குது. அன்னைக்கு சாயங்காலமே எங்களுக்கு மனைவி ஊரான மன்னார்குடியில ரிசப்ஷன்.

மதுரையில இருந்து மன்னார்குடி கிளம்பறப்ப ‘திருச்சி வெக்காளியம்மன் கோயிலுக்கு அப்படியே போலாம்’னு அந்த ரூட்டைப் பிடிச்சோம். வழியெல்லாம் நல்ல மழை. எங்களோட எங்க அக்காவும் வந்ததால அப்பவும் நான் மனைவிகிட்ட பேச சந்தர்ப்பம் வாய்க்கலை. வெக்காளியம்மன் கோயிலுக்குப் போயிட்டு, மன்னார்குடி ரிசப்ஷனுக்கு நாங்க போய்ச் சேர்ந்தபோது நைட் மணி ஒன்பது. ஏழு மணிக்கு ரிசப்ஷன்னு இன்விடேஷன் பார்த்துட்டு வந்து காத்திருந்த ஜனமெல்லாம் வீட்டுக்குத் திரும்பிப் போயிட்டாங்க!

நாங்க சைலன்ட்டா என் மாமனார் வீட்ல சாப்பிட்டுட்டு எங்க ஊருக்குக் கிளம்பிட்டோம். மருங்கூருக்கு நாங்க வந்து சேர்ந்தப்போ மணி ராத்திரி ஒன்றரை. அந்த நடுராத்திரில எங்க கிராமத்து மக்கள் தடபுடலா மேளம் கொட்டி எங்களுக்கு வரவேற்பு கொடுக்கறாங்க. ஒரு வழியா வீட்ல செட்டில் ஆனதும், ‘‘உன் வொஃய்ப்கிட்ட போய் பேசுடா’’னு எங்க அக்கா பர்மிஷன் குடுக்குறாங்க.  இப்பதான் என் வொய்ஃப்கிட்ட முதல் முறையா பேசப் போறேன்.

‘‘நான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ்ல படிச்சிருக்கேன்…’’னு ஆரம்பிச்சி, சினிமாவுல டைரக்டர் ஆனது எப்படி?னு விலாவாரியா மூச்சு விடாம என் பிரதாபங்களைச் சொல்லி முடிச்சேன். ஆனா, அவங்க ஒரு வார்த்தை குறுக்கே வாயைத் திறந்து பேசலை. அதுக்குப் பிறகு, ‘‘என்ன நான் இவ்வளவு பேசுறேன். நீ ஒண்ணுமே பேசமாட்டேன்றே?’’னு கேட்குறேன்… ‘‘முஜே தமிழ் நஹி மாலும்’’ங்கறாங்க, இந்தியில! நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அவங்க அப்பா ராணுவத்துல சேர்ந்து பஞ்சாப்ல வேலை பார்த்தவர். இவங்க அங்கேயே படிச்சு வளர்ந்ததால தமிழே தெரியாது; இந்திதான் தெரியுமாம். எனக்கு ஸ்கூல்ல செகண்ட் லாங்குவேஜ் இந்திங்கறதால, நாங்க அப்படியே மெல்ல மெல்ல ட்யூன் ஆகிட்டோம். என் மனைவி பெயர் உஷா.

நாட்டியப் பேரொளி பத்மினி அம்மா என்னோட சீரியல்ல நடிச்சப்போ, இந்தக் கதையை அவங்ககிட்ட சொன்னேன். விழுந்து விழுந்து சிரிச்சிட்டு,  ‘‘ஏன் மனோ… இந்த சீன்கள் எல்லாத்தையும் நீ ஒரு படத்துல வைக்கலாமே’’னு  சொன்னாங்க. பத்மினி அம்மா மட்டுமில்ல… சரோஜாதேவி அம்மா, சௌகார் ஜானகி  அம்மாவில இருந்து என்னோட பட ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாருக்குமே இது தெரியும். ராதிகா இதைச் சொல்லிச் சொல்லி செம கலாய் கலாய்ப்பாங்க.

‘நான் உங்கள் ரசிகன்’ படம் ஃபர்ஸ்ட் காப்பி பார்க்குறதுக்கு என் மனைவியையும் அழைச்சுட்டுப் போயிருந்தேன். அவங்க முன்னாடி ராதிகா என்கிட்ட, ‘‘மனோ, போன வாரம் உனக்கு அது வாங்கிக் குடுத்திருந்தேனே… அது உனக்கு ஓகேதானே?’’னு மர்மமா கேட்டு சிரிச்சாங்க. என் வொய்ஃப் அப்பாவியா என்னைக் கேள்வியோட பாக்குறாங்க! ‘‘நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே… ராதிகா கலாய்க்கறாங்க’’னு புரிய வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. நகைச்சுவைங்கறது என் வாழ்க்கையோட இயைந்த விஷயம்னு நான் புரிஞ்சிக்கிட்ட தருணங்கள் இதெல்லாம்!

திருமணத்துக்கு அப்புறம் நான் இயக்கிய படம், ‘சிறைப்பறவை’. கலைமணி கதை. ஹீரோயினா வழக்கம் போல ராதிகாவை புக் பண்ணிட்டோம். ஹீரோ யாருனு தெரியல. அப்போ, விஜயகாந்த் வளர்ந்து வர்ற நேரம். அவர்கிட்ட பேசிப் பார்க்கலாம்னு போனோம். அவர் கதையைக் கேட்டதும், ‘‘இது ஹீரோயின் சப்ஜெக்ட்டா இருக்கே… இதுல எனக்கு வேலையே இல்லையே?’’னு கேட்குறார். ‘‘நீங்க சரினு சொன்னா… உங்களுக்கான சீனை கூடுதலா வச்சிக்கலாம். தவிர, அடுத்து உங்களை மெயினா வச்சி ஒரு படம் பண்றோம்!’’னு நானும் கலைமணியும் ப்ராமிஸ் பண்ணோம். அதனால, ‘சிறைப்பறவை’யில நடிக்க விஜயகாந்த் சம்மதிச்சார். அந்தப் படம் வெற்றியடைஞ்சு, எனக்கு பெரிய பெயர் கிடைச்சிடுச்சு.

இந்த நாட்கள்ல என் படங்களுக்கு இசையமைக்கணும்னு நாராயணன்னு ஒரு பையன் என்னை அடிக்கடி வந்து சந்திச்சுக்கிட்டே இருந்தார். அவனை எனக்குப் பிடிச்சுப் போனதால நான் போற இடத்துக்கெல்லாம் அவனையும் கூட்டிட்டுப் போனேன். இளையராஜா கூட நான் கம்போஸிங் போனால் கூட நாராயணனையும் அழைச்சிட்டுப் போவேன். தனியா இசையமைப்பாளர் ஆகணும்னு ஆர்வத்தோட இருந்த பையன். நேரம் வந்தப்போ அவனுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்க முடிவு பண்ணிட்டேன். நாராயணன்ங்கிற பெயரை சிற்பினு மாத்தி, நான் அவரை கமிட் பண்ணின டைம்ல விக்ரமனோட ‘கோகுலம்’ படமும் பண்ணினார் அவர்.

இதற்கிடையே நான் என்னோட அடுத்த பட டிஸ்கஷனுக்காக கலைமணியோட குற்றாலத்திற்கு போயிருந்தேன். அங்கே எனக்கு ரெண்டு போன் கால்கள் வருது… ரெண்டுமே மிகப்பெரிய கம்பெனிகள். ஒண்ணு, ஆர்.எம்.வீ அவர்களுடைய சத்யா மூவீஸ்ல இருந்து. இன்னொண்ணு, கலைஞர் அவர்களுடைய பூம்புகார் பிலிம்ஸ்ல இருந்து. ஒரு கணம் சந்தோஷம். ஆனாலும் அடுத்த நொடி, யாருக்கு முதல்ல படம் பண்றதுன்னு குழம்பிப் போயிட்டேன்.

உடனடியா சென்னைக்குக் கிளம்பி வந்து பூம்புகார் பிலிம்ஸ்ல செல்வம் அவர்களைப் போய்ப் பார்த்தேன். ‘‘என்னோடது, ‘பாலைவன ரோஜாக்கள்’னு ஒரு ரீமேக் படம். ஆனா, சத்யா மூவீஸுக்கு நீங்க பண்ணப்போறது ரஜினிகாந்த் படம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது பெரிய விஷயம். அதனால நீங்க ரஜினி படத்தை விட்டுடாதீங்க. உங்கள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போற சான்ஸ் அது’’னு தெளிவு படுத்தி, என்னை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வச்சார்.

அப்படிப் பண்ணின படம்தான் ‘ஊர்க்காவலன்’. இந்தப் படத்துக்கு சிற்பியை இசையமைக்க வைக்கலாம்னு நினைச்சு, ஆர்.எம்.வீ கிட்ட அவரை அழைச்சிட்டுப் போனேன். சிற்பி பாடிக் காட்டினது, ட்யூன்ஸ் எல்லாம் அங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. ரஜினி படத்துக்கு இசை… சத்யா மூவீஸ் படம் வேற… சிற்பிக்கு பயங்கர ஹேப்பி. அன்னிக்கே நானும் ஏ.எல்.நாராயணனும் கதை டிஸ்கஷன்ல உட்கார்றோம். மறுநாள் சத்யா மூவீஸ் போறேன். அங்கே உள்ளுக்குள்ள இருந்து வேறொருத்தர் வாத்திய சத்தம் கேட்குது. ‘சிற்பி இன்னும் வந்து சேரலியே… உள்ளே இசையமைக்கிறது யாரா இருக்கும்?’னு நான் திகைச்சுப்போய்
நிக்கிறேன்..!

ராதிகா என்கிட்ட, ‘‘மனோ, போன வாரம்  உனக்கு அது வாங்கிக் குடுத்திருந்தேனே… அது உனக்கு ஓகேதானே?’’னு மர்மமா  கேட்டு சிரிச்சாங்க. என் வொய்ஃப் அப்பாவியா என்னைக் கேள்வியோட பாக்குறாங்க!

கல்யாணம் ஆகாமலே விதவை!

ஒரு சூப்பர் ஹிட் காதல் கதை

கேரளாவில் ஒரு சினிமா 19 நாளில் 20 கோடி ரூபாய் வசூல் அள்ளுவதெல்லாம் நம்ப முடியாத சாதனை. அதைச் சமீபத்தில் செய்திருக்கிறது ‘என்னு நிண்ட மொய்தீன்’ திரைப்படம். இதுவரை அதிக கலெக்‌ஷன் அள்ளிய டாப் 5 மலையாளப் படங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. தமிழில் இதுவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரீமேக்கப்படும் என்கிறார்கள்.

1960களைக் கண்முன் நிறுத்தியிருக்கும் இந்தப் படம், மொய்தீன் – காஞ்சனமாலா எனும் நிஜக் காதலர்களின் கதை. கல்யாணம் ஆகாமலேயே மொய்தீனின் விதவையாக வாழும் காஞ்சனமாலாவுக்கு இப்போது 75 வயது. ஒரு காவியக் காதலை சம காலத்தில் காணத் தந்தவர் எனும் மரியாதையை அவர் மீது வைத்திருக்கிறார்கள் கேரள மக்கள்!

கோழிக்கோடுக்கு அருகே உள்ள முக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காஞ்சனமாலா. மதங்கள் தாண்டி இவர் மொய்தீன் என்பவரைக் காதலித்ததும், சமூகம் அவர்களைச் சேர விடாமல் தடுத்ததும், அசைக்க முடியாத உறுதியோடு இருவருமே வேறு வாழ்க்கை தேடிக்கொள்ளாமல் வாழ்ந்ததும்… கேட்கக் கேட்க நெகிழ்ச்சிக் குவியல். இதுவரை புத்தகமாகவும் ஆவணப்படமாகவும் வந்திருக்கும் இவர்களின் வாழ்க்கை, திரைப்படமாக இத்தனை பெரிய வெற்றியைத் தொடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை!

‘‘நான் அந்தப் படத்தையே பார்க்கவில்லை. பார்க்கப் போவதும் இல்லை. என் வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளை திரையில் பார்த்தால் மீண்டும் தகர்ந்து விடுவேன். நான் மொய்தீனுக்காக செய்ய வேண்டிய சமூக சேவைகளை விரிவுபடுத்த இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழ வேண்டும்!’’ – இடுங்கிய கண்களில் சோகம் வழியப் பேசுகிறார் காஞ்சனமாலா.

‘‘இந்த ஊரிலேயே பிரபலமான இரண்டு குடும்பங்கள் எங்களுடையவை. என் அப்பாவும் அவர் அப்பாவும் நண்பர்கள். ஒன்றாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள். நாங்கள் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். அதன் பின்புதான் எங்களிடையே இருந்தது காதல் என இனம் கண்டுகொண்டோம். எங்களிடையே கடிதப் போக்குவரத்து அதிகரித்தது. இது ஒரு நாள் வீட்டிற்குத் தெரிய வர… என் படிப்பை நிறுத்தினார்கள்.

அதன் பின், ஒன்றல்ல… இரண்டல்ல… 25 ஆண்டுகள் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டேன். 10 ஆண்டுகள் மொய்தீனுக்கும் எனக்கும் கடிதப் போக்குவரத்து கூட இல்லை. ஆனால், உள்ளுக்குள் முன்பைவிட தீவிரமாகக் காதலித்தோம். வீட்டில் அடிக்கடி அடி… உதை… மிதி..! மொய்தீனுடன் வாழ வேண்டும் என்று நான் ரொம்பவும் விரும்பியதால், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை!

மொய்தீனின் வாப்பாவிற்குத் தன் மகன், தன் உயிர் நண்பனின் மகளைக் காதலித்துவிட்டதில் பெரும் கோபம். பச்சை துரோகம் செய்துவிட்டதாகத் திட்டினார். மொய்தீனை கத்தியால் குத்திய சம்பவம் கூட நடந்தது. மொய்தீனும் நானும் தனியே போய் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அப்படிச் செய்தால் எனது ஆறு சகோதரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் பொறுத்திருக்கத் தீர்மானித்திருந்தோம். முதல் 10 ஆண்டு காலத்தில், சகோதரிகளுக்குத் திருமணம் ஆகிவிட்டதால், அதன்பின் என் மேல் இருந்த கட்டுப்பாடு ஓரளவிற்குத் தளர்த்தப்பட்டது.

எங்கள் காதலைப் புரிந்துகொண்டவர்கள் கடிதப் பரிவர்த்தனைக்கு ரகசியமாக உதவினார்கள். நானும் மொய்தீனும் என்ன எழுதியிருக்கிறோம் என்று யாருக்கும் தெரியாமல் இருக்க, நாங்களாகவே குறியீடுகளை வைத்து புதிய எழுத்துகளை உருவாக்கி அதில் எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டோம். இருவரின் காதலுக்காக ஒரு மொழியையே உருவாக்கியது அநேகமாக நாங்களாகத்தான் இருப்போம்.

இந்தக் கால கட்டத்தில், மொய்தீன் ஒரு கால்பந்தாட்டக்காரராக, அரசியல்வாதியாக, பஞ்சாயத்து உறுப்பினராக, பேச்சாளராக, முக்கம் பஞ்சாயத்தின் முக்கிய பிரமுகராகப் பரிணமித்தார். முக்கம் வந்திருந்த பிரதமர் இந்திரா காந்தி, மொய்தீன் ஆரம்பித்த ‘ஸ்போர்ட்ஸ் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிட்டார் என்றால் அவர் செல்வாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள். மொய்தீனின் வாப்பா இறந்த பின்பு, அவரது தம்பிக்கு 18 வயது நிறைவடையக் காத்திருந்தோம். 1983ம் ஆண்டின் துவக்கத்தில் அவன் மேஜர் ஆனதும், சொத்துகளைப் பிரித்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளலாம் என்று மொய்தீன் தீர்மானித்தார்!’’ என்கிற காஞ்சனமாலாவின் வாழ்வில் அதன்பின் விதி வில்லனாகியிருக்கிறது.

‘‘1982 ஜூலை 14 இரவில் இங்கு பேய்மழை. இருவழிஞ்சி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அடுத்த நாள் காலை கோழிக்கோடு செல்ல மொய்தீன் படகில் ஏற… அவருடன் 28 பயணிகளும் இருந்தனர். நடு ஆற்றில் அந்தப் படகு கவிழ்ந்தது. மொய்தீனுக்கு நீச்சல் மிக நன்றாக வரும். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் கரை நோக்கி நீந்தவில்லை. மற்ற பயணிகளைக் காப்பாற்றியிருக்கிறார்.

கடைசி இருவரை காப்பாற்றும் முயற்சியில் அவர் சுழலுக்குள் சிக்கிவிட்டார். இருவழிஞ்சி ஆற்றில் குளித்து, நீந்தி வளர்ந்தவர் மொய்தீன். கடைசியில் அந்த நதியிலேயே முடிவைத் தேடிக்கொண்டார். மூன்றாம் நாள் மொய்தீனின் உடல் கிடைத்தது. அவரின் இறுதி நிலையைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. அந்தக் கோலத்தைப் பார்த்தால், நானும் இறந்துவிடுவேன் என்று பயந்தார்கள். தற்கொலைக்கு முயல்வேன் என்று பயந்து, வீட்டின் கொல்லைப் புறத்தில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எல்லாம் அகற்றினார்கள். பட்டினி கிடந்து சாகலாம் என்று முடிவு செய்தேன்.

மொய்தீனின் உம்மாவைக் கொண்டு எனக்கு ஆறுதல் சொல்லச் சொன்னார்கள். மொய்தீன் ஊருக்குச் செய்ய நினைத்த நல்ல காரியங்களைத் தொடரவேனும் நான் உயிரோடிருக்க வேண்டும் என்றார் அவர்.

அந்த ஆறுதல் வார்த்தைகள் மொய்தீன் சொல்வதாகவே எனக்குப் பட்டன. தட்டிக் கழிக்க முடியவில்லை. மொய்தீன் உயிரைக் குடித்த இருவழிஞ்சி ஆற்றின் தண்ணீரைக் குடித்து உண்ணாவிரதத்தை முடித்தேன். மொய்தீனின் மனைவி ஆகத்தான் முடியவில்லை… மொய்தீனின் விதவையாக மாற முடிவு செய்தேன்!’’ என்கிற காஞ்சனமாலா, அபலைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவு தரும் ‘மொய்தீன் சேவா மந்திர்’ அமைப்பை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

என் வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளை திரையில் பார்த்தால் மீண்டும் தகர்ந்து விடுவேன்.இருவரின் காதலுக்காக ஒரு மொழியையே உருவாக்கியது அநேகமாக நாங்களாகத்தான் இருப்போம்.

தண்ணீரால் காயமுற்றவள்!

‘ஜலம் கொண்டு முறிவேற்றவள்’ (தண்ணீரால் காயமுற்றவள்) என்ற பெயரில் காஞ்சனமாலாவின் கதையை டாகுமெண்டரி படமாக எடுத்தவர் இயக்குநர் விமல். அவரேதான் ‘என்னு நிண்ட மொய்தீன்’ திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். ‘‘மொய்தீன் சாயல் கொண்ட பிரித்விராஜ் மொய்தீனாக நடித்தால் நன்றாக இருக்கும்’’ என காஞ்சனமாலா பரிந்துரைத்தார். காஞ்சனமாலாவாக பார்வதி நடித்தார். ‘‘எங்கள் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் படத்தில் மாற்றிக் காட்டப்பட்டிருக்கின்றன’’ என இடையில் காஞ்சனமாலா குற்றம் சாட்டினார்.

இருந்தாலும் படம் பல கோடிகள் வசூல் செய்தது. காஞ்சனமாலாவின் சமூக சேவைகள் தற்சமயம் நடப்பது இரும்புத் தகடுகள் வேயப்பட்ட ஒரு சாதாரண இடத்தில். இதைப் படக்குழு கண்டுகொள்ளாமல் விட்டாலும், ‘என்னு நிண்ட மொய்தீன்’ படம் பார்த்த மலையாள நடிகர் திலிப், காஞ்சனமாலாவைச் சந்தித்து, அவரது சமூக சேவைகளுக்காக நிதி உதவி செய்வதாக அறிவித்திருக்கிறார். இதன் பின்பாவது படக்குழு உதவ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

அஜித்துக்கும் விஜய்க்கும் அந்த ஒற்றுமை!

விஜய், அஜித், சூர்யா, தனுஷ், மோகன்லால், ஜெயம் ரவி என டாப் ஹீரோக்களுக்கு பிடித்தமான ஃபைட் மாஸ்டர் டி.சில்வா. இயக்குநர்கள் சிவா, வெங்கட்பிரபு, கௌதம்மேனன் ஆகியோருக்கும் ஃபேவரிட். பெங்களூருவில் புனித் ராஜ்குமாரின் கன்னடப் பட ஷூட்டிங்கில் டிஷ்யூம் போட்டுக்கொண்டிருந்த சில்வாவைப் பிடித்தோம்.

‘‘பூர்வீகம் சென்னைதாங்க. வீட்ல வச்ச பேரு செல்வம். ‘செல்வா’னு கூப்பிடுவாங்க. பீட்டர் ஹெயின் மாஸ்டர்தான் என் குரு. அவரோட அசிஸ்டென்ட்டா 80 படங்கள் பண்ணிட்டு, தெலுங்குப் படங்கள் வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஷங்கர் சாரோட ‘கல்லூரி’ மூலம் தமிழில் நான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது.

ஆனா, அப்போ ராஜமௌலி சாரோட ‘யமதொங்கா’வில் பிஸியானதால முடியாமப் போச்சு. அப்புறம், ‘யாரடி நீ மோகினி’, ‘சரோஜா’னு வரிசையா தமிழ்ப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பட டைட்டில்ல என் பெயரை ‘சில்வா’னு தவறுதலா போட்டுட்டாங்க. அந்தப் பேர் இன்னும் நல்லா ஃபாரீன் டச்ல இருந்தது. அதனால சில்வாவே நிலைச்சிடுச்சு!

ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் நல்லா பண்ணியிருக்கார்னு வெளியே தெரியறது சாதாரண விஷயமில்ல. ஃபைட்டுக்கு முக்கியத்துவம் உள்ள கதை, அதை சீன் பண்ணும் இயக்குநர், சரியா படம் பிடிக்கற ஒளிப்பதிவாளர், விறுவிறுப்பைக் கூட்டி அந்த ஃபைட்டை இன்னும் மெருகேத்துற எடிட்டர்னு எல்லாரோட பங்களிப்பும் சேரும்போதுதான் ஒரு நல்ல ஸ்டன்ட் மாஸ்டர் வெளியே தெரிய முடியும்.

எனக்குக் கிடைச்ச இயக்குநர்கள் எல்லாருமே நல்ல ஃப்ரீடம் கொடுத்து, வேலை வாங்கக்கூடியவர்கள்தான். லிங்குசாமி சார், சிவா சார் எல்லாம் ஃபைட் எப்படி இருக்கணும்னு சீன் பை சீனா எழுதிடுவாங்க. நாம அதை எக்ஸிக்யூட் பண்ணிக் குடுத்தா போதும்!’’

‘‘நீங்க வொர்க் பண்ணின ஹீரோக்கள் பத்தி..?’’‘‘மோகன்லால் சார் எவ்வளவு பெரிய ஹீரோ… ‘ஜில்லா’வில் வொர்க் பண்ணும்போது ‘நீ என்ன சொல்றியோ அப்படி பண்றேன்ப்பா’னு பணிவா சொன்னார். அப்பா கேரக்டர்னாலும், ஃபைட் சீன்கள்ல அவர் செம ஸ்பீடு காட்டினார். விஜய் சார் ‘திருமலை’, ‘ஆதி’ டைம்ல இருந்தே பழக்கம். ‘வேலாயுதம்’, ‘தலைவா’ பண்ணும்போது இன்னும் நெருங்கிட்டோம். ‘வேலாயுதம்’ல டிரெயின் மேல ஓடி வர்ற சீன்ல, ‘டூப் வைக்காதீங்க’னு சொல்லி அவரே பண்ணினார். நாம சீக்குவென்ஸ் சொல்லும்போது, எந்த பரபரப்பும் இல்லாம கவனிப்பார். ஆனா, ஷாட்ல கில்லி மாதிரி அசத்திடுவார். விஜய் சார், அஜித் சார் ரெண்டு பேருமே எப்பவும் டூப் போடுறதை விரும்ப மாட்டாங்க. ரிஸ்க் உள்ள ஷாட்டை கேட்டு வாங்குவாங்க.

சூர்யா சார் எல்லாத்திலும் பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்ப்பார். ‘யாரடி நீ மோகினி’யில இருந்துதான் தனுஷ் சார் பழக்கம். அவரோட ‘3’, ‘வேங்கை’, ‘விஐபி’, ‘மாரி’, ‘தங்கமகன்’னு எல்லா படங்களுக்கும் வேலை செய்யறேன். ஃபைட்னா ரொம்ப இயல்பா, யதார்த்தமா இருக்கணும்னு விரும்புவார். கௌதம்மேனன் சாருக்கு என்மேல எப்பவும் ஒரு பிரியம் உண்டு. ‘என்னை அறிந்தால்’ல என்னை வில்லனாக்கி அழகு பார்த்தார். ‘வி.டி.வி’ இந்தியில பண்ணும்போது, நான் ஸ்டன்ட் கவனிச்சேன். இப்போ ‘அச்சம் என்பது மடமையடா’ வரை அவரோட நட்பு தொடருது!’’

‘‘என்ன சொல்றார் அஜித் சார்?’’‘‘ ‘மங்காத்தா’வில் இருந்துதான் அஜித் சார் அறிமுகம். அப்புறம் ‘வீரம்’, ‘வேதாளம்’.  ‘வீரம்’ல டிரெயின் ஃபைட் ரொம்பப் பேசப்பட்டதால, என்ன ரிஸ்க்னாலும் என் மேல நம்பிக்கை வச்சு பண்ணுவார். சீன் எடுக்கறப்ப அடி பட்டாலும், சிராய்ப்பு  ஆனாலும் அதை உடனே வெளிக்காட்டிக்க மாட்டார். மறுநாள் ஷூட்டிங்ல, ‘இடது  கையில என்ன சார்?’னு கேட்டா, ‘நேத்து வாங்கினது’னு சொல்லிச்  சிரிப்பார்.

‘வேதாளம்’ ஷூட்டிங் அப்போ, வில்லன் அடிச்ச அடி, அஜித் சார் கழுத்துல பட்டுடுச்சு. ‘முருகா’னு அலறியபடி கழுத்தைப் பிடிச்சிட்டு கீழே விழுந்துட்டார். எல்லாரும் பதறிட்டோம். ‘ஹாஸ்பிடல் வேணாம். எனக்கு ஒரு பதினைஞ்சு நிமிஷம் டைம் கொடுங்க…’னு அமைதியா அதே இடத்துல படுத்துக் கிடந்தார். அப்புறம் டாக்டர் வந்து ஒரு இன்ஜெக்‌ஷன் போட்டார். ‘இன்னொரு ஊசியும் போட்டுடுங்க. ஷாட்டை முடிச்சிடுவோம். என்னால ஷூட்டிங் பாதிக்கக் கூடாது’னு அன்னிக்கு கழுத்து வலியோட நடிச்சுக் கொடுத்தது மறக்க முடியாதது!’’

‘‘உங்களைப் பத்தி..?’’
‘‘அழகான – அளவான குடும்பம். மனைவி இல்லத்தரசி. மகன் கிரிஷன் அஞ்சாவது படிக்கிறார். மகள் அமிர்தவர்ஷினி, ரெண்டாவது படிக்கிறாங்க. இப்ப தமிழ் சினிமா ஸ்டன்ட் யூனியனுக்கு வெளி மாநிலங்கள்ல மட்டுமில்ல… வெளிநாடுகள்லயும் நல்ல மரியாதை இருக்கு. இங்க உள்ள ஆட்கள் 17 மொழிகள்ல வேலை செய்யிறாங்க. ஹாலிவுட் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்களுக்கும் நாம  வொர்க் கொடுக்கறோம்.

இங்கே நம்ம ஊர்கள்ல டான்ஸ் ஸ்கூல்ஸ் மாதிரி, வெளிநாடுகள்ல ஃபைட் அகாடமி நிறைய வச்சிருக்காங்க. எல்லா வித ஃபைட்களையும் கத்துக் குடுக்கற மாதிரி, இன்டர்நேஷனல் தரத்தோட ஒரு ஸ்டன்ட் அகாடமியை பெரிய அளவில் ஆரம்பிச்சு, நிறைய பேருக்கு இதை சொல்லிக் கொடுக்கணும்னு விரும்புறேன். காலமும் நேரமும் செட் ஆகுறப்ப அது நடக்கும்!’’

ஆக்‌ஷன் சீன் சொல்லும் ஸ்டன்ட் டி.சில்வா சீன் எடுக்கறப்ப அடி பட்டாலும், சிராய்ப்பு  ஆனாலும் அதை உடனே வெளிக்காட்டிக்க மாட்டார்.

கோலிவுட கல்யாண சீஸன்!

நகுல் – ஸ்ருதி பாஸ்கர்

‘‘என்னோட  ஃப்ரெண்டை மீட் பண்ணப் போனப்போ, ஸ்ருதியை சந்திச்சேன். முதல்  சந்திப்பிலேயே ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். நட்பு காதலாச்சு. அடுத்த  வருஷ துவக்கத்திலேயே எங்க கல்யாணம் இருக்கும்!’’ – செம ஹேப்பி ஃபீல் தருகிறார் நகுல். ‘‘நகுல் ரொம்ப சிம்பிள். எப்பவும்  பாஸிட்டிவ்வா பேசுவார். அவரை எனக்கு அஞ்சு வருஷமா தெரியும்..!’’ என்கிற ஸ்ருதி பாஸ்கர், தன்னைப் பற்றி அறிமுகம் தருகிறார்.

‘‘சொந்த  ஊர் சென்னை. அப்பா பாஸ்கர், ஒளிப்பதிவாளர். ஜர்னலிசம் படிச்சிட்டு வெளிநாட்டுல பேஸ்ட்ரி அண்ட் சாக்லெட் கோர்ஸ் படிச்சு  முடிச்சேன். இப்ப  எம்.பி.ஏ பண்ணிக்கிட்டே சத்யம் சினிமாஸ்ல வொர்க் பண்றேன். முதல்ல நகுல்தான்  காதலைச் சொன்னார்.

அப்புறம் எங்க வீட்ல அப்பா  ரொம்ப தயங்கினாங்க. ‘எனக்கு நகுல் மேல இருந்தது லவ்தானா? இல்ல வெறும்  இன்ஃபேச் சுவேஷனா?’னு சந்தேகம் இருந்தது அப்பாவுக்கு. அப்புறம்தான் எங்க காதல் எவ்வளவு ஸ்ட்ராங்னு தெரிஞ்சு வீட்ல சம்மதிச்சாங்க. கண்டிப்பா  மேரேஜுக்கு வந்திடுங்க!’’ – கண்களில்  கலர்ஃபுல் கனவுகள் மின்ன பேசுகிறார் ஸ்ருதி

ஆல்ரைட் அஜித்!

கால் மூட்டு வலி ஆபரேஷனுக்குப் பின், எப்படி இருக்கிறார் அஜித்? அவருக்கு என்னாச்சு? ‘தல’யின் நெருங்கிய வட்டங்களில் விசாரிக்கப் புகுந்தால், வியக்கிறார்கள் ஒவ்வொருவரும். அதிலிருந்து நாம் எடுத்த நியூஸ் ஜூஸ்…


‘ஆரம்பம்’ ஷூட்டிங்கில் விறுவிறுப்பான கார் சேஸிங். ஓடிக்கொண்டிருக்கும் ஒரு காரிலிருந்து மற்றொரு காருக்கு அஜித் தாவிக் குதிக்க வேண்டும். சீனை விளக்கிவிட்டு ‘‘நீங்க ரிஸ்க் எடுக்க வேண்டாம். டூப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என அஜித்திடம் சொல்கிறார் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான லீ விட்டேகர். ‘‘எனக்கு பதிலா டூப் வச்சு எடுத்தீங்கன்னா…

இதை நான்தான் பண்ணியிருப்பேன்னு என் ரசிகன் நம்பிடுவான். காசு கொடுத்து படம் பார்க்கும் அவனை ஏமாத்தக்கூடாது. இது சாதாரண சேஸிங்தான். டோன்ட் வொர்ரி, நானே பண்ணிடுறேன்’’ என அஜித் சொல்ல… வாயடைத்துப் போயிருக்கிறார் அந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர். அந்த சேஸிங்கில் எதிர்பாராதவிதமாக கால் முட்டியில் அடிபட, துடிதுடித்துப் போய்விட்டார் அஜித்.

சின்னதொரு ஆபரேஷன் பண்ணினால் சரியாகிவிடும் என மருத்துவர்கள் சொன்னார்கள். இருப்பினும் கோவை எலும்பு முறிவு நிபுணர் டேவிட் ராஜனிடம் வெறுமனே வலிநிவாரண ட்ரீட்மென்ட் மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாகிவிட்டார் அஜித்.
‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’ வரை ஆபரேஷனை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ‘வேதாளம்’ சண்டைக் காட்சிகளில் எல்லாம் ரிஸ்க் எடுத்தாலும், பெரிதாக பிரச்னை இல்லை.

ஆனால், ‘ஆலுமா டோலுமா’ டான்ஸின்போது, ஏற்கனவே அடிபட்ட அதே கால் மூட்டுப் பகுதியில் அடிபட்டுவிட, வலியால் சுருண்டு விட்டார் மனிதர். ‘‘ ‘வேதாளம்’ ரிலீஸுக்குப் பிறகு ஆபரேஷன் பண்ணிக்கறேன்’’ எனக் குடும்பத்தினருக்கு ப்ராமிஸ் கொடுத்திருந்தார். சொன்ன மாதிரியே செய்துகொண்டார். ‘ஆபரேஷன் நல்லபடியா நடக்கணும் கடவுளே’ என முன்பாகவே திருப்பதியில் மனமுருக வேண்டிக்கொண்டார்.

பிரபல மருத்துவமனையில் சேர்ந்தால் ரசிகர்கள் தொல்லை அதிகம் இருக்கும் என்பதால், கோவை டாக்டர் டேவிட் ராஜனின் ஆலோசனைப்படி, குமரன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார். மூன்று மணி நேரத்தில் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது. மருத்துவமனையில் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘‘தெரிஞ்சா கூட்டம் வந்துடும்… வீட்ல இருந்து பார்த்துக்கறேன்’’ என மறுநாளே வீடு திரும்பி விட்டார்.

‘‘என்னாச்சு?’’ எனப் பதறி விசாரித்தவர்களிடம் எல்லாம், ‘‘மூன்று வாரங்கள்ல எல்லாம் பர்ஃபெக்ட் ஆகிடும். ஸோ, யாரும் நேர்ல வந்து பார்க்க வேண்டாம்’’ என வேண்டுகோள் வைத்துவிட்டார். இப்போது வீட்டில் நல்ல ஓய்வில் இருக்கிறார். மருத்துவர்கள் அடிக்கடி வந்து செக்கப் செய்கிறார்கள். பிஸியோதெரபி பயிற்சியும் தருகிறார்கள். நலம் விசாரிப்பவர்களுக்கே தைரியம் சொல்லும் அஜித்தைக் கண்டு பலரும் வியக்கிறார்கள்.

ராஜேஷ் ஜோக்ஸ்-6

‘டாக்டர்! தினமும் காலைல பத்து மணிக்கு மேல தலை சுத்தறது…’’
‘‘ஏன் அப்படி..?’’‘‘பத்து மணிக்கு மேலதானே டாக்டர் டாஸ்மாக் கடையைத் திறப்பாங்க!’’


‘‘தலைவர் வீட்டு ரெய்டுல என்ன கலாட்டா..?’’
‘‘சி.பி.ஐ. டைரக்டர்கூட தலைவர் செல்ஃபி எடுக்கணும்னு சொல்லியிருக்கார்..!’’

‘‘சி.பி.ஐ. ரெய்டு வந்தபிறகு தலைவர் குஷியா இருக்காரே… என்ன விஷயம்?’’
‘‘இப்பத்தான் தன்னோட உண்மையான சொத்து மதிப்பு அவருக்குத் தெரிஞ்சுதாம்..!’’

‘‘தலைவர் சமீப நாட்களாக நடப்பதற்கு சிரமப்படுவதால், அவர்மீது செருப்பு எறிபவர்கள் அக்குபங்சர் செருப்பு இருந்தால் எறியும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!’’

ஸ்பீக்கரு…

‘‘2016ம் ஆண்டில் கண்டிப்பாக கூட்டணி சேர்ந்துதான் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்பதால், மற்ற கட்சிகளை இப்போதே வாய் வலிக்க திட்டித் தீர்த்துக்கொள்ளவும் என…’’

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ‘பொறுமை கடலினும் பெரிது’ன்னு சொன்னாலும், அதுக்காக பொறுமையில படகு, கப்பல் எல்லாம்விட முடியாது!

‘‘கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 234 தொகுதிகளையும் ஒதுக்கிய பெருந்தன்மை எங்கள் தலைவரைவிட வேறு எந்தத் தலைவருக்கு உண்டு என்று கேட்க விரும்புகிறேன்…’’

ராஜேஷ் ஜோக்ஸ்-5

‘‘நம்ம தலைவர் கட்டின மேம்பாலம் திறப்பு விழா கல்வெட்டை பார்த்துட்டு ஏன் ரொம்ப கோபமா இருக்காரு..?’’‘‘கான்ட்ராக்டர்கிட்ட தலைவர் வாங்கின கமிஷன் தொகை எவ்வளவுன்னும் அந்தக் கல்வெட்டுல போட்டுட்டாங்களாம்!’’


‘‘கூட்டணிக்காக மற்ற தலைவர்கள் வாசலைத்தான் திறந்து வைப்பார்கள். எங்கள் தலைவர் தெருமுனையிலேயே அமர்ந்திருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’

‘‘மகளிரணித் தலைவி பேரை ஏன் தலைவர் திரும்பத் திரும்பச் சொல்றார்?’’
‘‘மைக் டெஸ்ட்டிங்
பண்றாராம்!’’

‘‘தலைவரை ஏன் கூட்டணியில இருந்து கழட்டி விட்டாங்க..?’’
‘‘வருமானத்துக்கு அதிகமா சம்பாதிக்கத் தெரியலைன்னாம்..!’’
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவர் தன்னோட பழைய குற்றப் பத்திரிகையையும் இப்ப வாங்கின குற்றப் பத்திரிகையையும் ஒப்பிட்டுப் பார்க்கறாரே… ஏன்?’’
‘‘முன்புக்கும் இப்போதைக்கும் முன்னேற்றம் இருக்கான்னு பாக்கறார்!’’

தத்துவம் மச்சி தத்துவம்

ஒரு பொண்ணுக்கு மீரா பாய், கஸ்தூரிபாய்னு தோழிகள் இருந்தாலும், அவங்களை ‘பாய் ஃபிரண்டு’னு சொல்ல மாட்டாங்க!

என்னதான் ஒரு டாக்டரம்மா வயசானவங்களா இருந்தாலும், அவங்க செய்யுற வைத்தியத்தை ‘பாட்டி வைத்தியம்’னு எல்லாம் சொல்ல முடியாது!

ராஜேஷ் சினி நியூஸ்

சென்னை மழை விஜய் – அட்லி படத்திற்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அடாத மழையில் விஜய்யின் விறுவிறுப்பான ஃபைட் சீன்களை ஷூட் செய்திருக்கிறார்கள். பேருந்திலும் ஒரு சண்டைக் காட்சி எடுக்கிறார்கள். இங்கே அது சாத்தியமில்லை என்பதால் கோவா ரோடுகளில் படமாக்கப் போகிறார்கள்.


‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஹிட்டைத் தொடர்ந்து மனீஷா யாதவிற்கு கிளாமர் கேரக்டர்களே தேடி வர, திகைத்து நிக்குது பொண்ணு. நடிப்பிற்கு இடையே பெங்களூருவில் பொட்டிக் ஷாப் ஒன்றையும் துவங்கியிருக்கிறார் மனீஷா.

பக்திப் பாடல்களுக்கென்றே வாழ்வை ஒப்புக்கொடுத்த பித்துக்குளி முருகதாஸ், தனது 95வது வயதில் மறைந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ‘கூலிங்கிளாஸ் வித் காவி உடை’ என்ற காம்பினேஷனுக்கு தனி அடையாளம் தந்த இவர், திருப்புகழைப் பாடுவதில் ஸ்பெஷலிஸ்ட். நமக்கெல்லாம் வெறும் பாடகராக மட்டுமே தெரியும் பித்துக்குளி, அக்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக ஆங்கிலேயரால் தாக்கப்பட்டு இடது கண் பார்வையை இழந்தவர். அதனாலேயே கூலிங் கிளாஸ் அணிந்தார்!

கடை திறப்பு விழா, கம்பெனி திறப்பு விழாவென செம பிஸியில் இருக்கிறார் ‘குத்து’ ரம்யா. சமீபத்தில் மாண்டியாவில் ஒரு குக்கீஸ் நிறுவன திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரம்யா, கோதுமை, அரிசி இல்லாமல் செய்யப்படும் அந்த குக்கீஸ் பிஸ்கெட் நிறுவனத்தில் 50 விவசாயிகளின் பங்களிப்பு இருக்கிறது எனக் கேள்விப்பட்டு, மனம் குளிர பாராட்டினார்.

நம்ம ஊரில் மழை சற்று அதிகமாகப் பெய்தாலே ஆட்டோ கட்டணம் இரண்டு, மூன்று மடங்காகி விடும். தண்ணீர் சூழ்ந்த தெருக்கள் பக்கமாகவே கால் டாக்ஸிக்கள் வருவதில்லை. ஆனால் பாரிஸ் நகரில் நிகழ்ந்த சம்பவங்கள் நெகிழச் செய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தொடர் குண்டுவெடிப்புகளில் அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். வார இறுதியை பலரும் கொண்டாடும் சூழலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, நகரையே ஸ்தம்பிக்கச் செய்தது. போக்குவரத்து சேவைகள் முடங்கின. ஹோட்டல்கள், மால்கள், கேளிக்கை அரங்குகள், விளையாட்டு மைதானங்களில் சிக்கிக்கொண்ட பலரும் எப்படியாவது வீடு திரும்பினால் போதும் என பீதியில் தவித்தனர்.

இந்த சூழலில் பாரிஸ் டாக்ஸி டிரைவர்கள் தங்கள் டாக்ஸி மீட்டரை ஆஃப் செய்துவிட்டு, பலரையும் இலவசமாக தங்கள் காரில் ஏற்றி, பத்திரமாக வீட்டுக்குக் கூட்டிப் போய்ச் சேர்த்தனர். வீட்டுக்குத் திரும்ப முடியாத பலரை, பாரிஸ் மக்கள் நிறைய பேர் தங்கள் வீடுகளுக்கு அழைத்துத் தங்க வைத்து, உணவும் அளித்தனர். இதற்காக ட்விட்டரில் ‘கதவு திறந்திருக்கிறது’ (#PorteOuverte) என ஒரு ஹேஷ்டாக்கை உருவாக்கி, ‘‘எங்கள் ஏரியாவில் யாராவது தவித்தால் எங்கள் வீட்டுக்கு வரலாம்’’ என அழைப்பு விடுத்தனர். யாரும் கூப்பிடாமலே மருத்துவமனைகளுக்குச் சென்று க்யூவில் நின்று பலரும் ரத்த தானம் செய்தனர். ‘மனிதம் என்றால் என்ன’ என கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சென்னை மழையை தீவிரமாக ரசித்தவர்களில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ஒருவர். தன் வீட்டை தண்ணீர் சூழ்ந்திருக்க, சைக்கிளில் மனைவியுடன் சென்று காய்கறி ஷாப்பிங் செய்து அசத்தியிருக்கிறார் மனிதர்.இந்த வருடத்தின் ஸ்பெஷல் வார்த்தை என ஆக்ஸ்ஃபோர்டு அகராதிக் குழு அறிவித்திருப்பது, ‘பிக்டோகிராப்’. அதாவது, ஆனந்தக் கண்ணீர் விடும் எமோஜி. மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து புள்ளிவிவரங்களை சேகரித்த ஆக்ஸ்ஃபோர்டு குழு, ‘2015ல் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இதுதான்’ எனக் கண்டறிந்து இந்தப் பெருமையைத் தந்திருக்கிறது.

கதகளி விஷாலுக்கு வில்லனே கிடையாது!

இயக்குநர் பாண்டிராஜ்

‘‘கொஞ்ச நேரம் மழையைப் பார்த்துட்டு இருந்திட்டு பேசுவோமா? மழை, தெருவை மட்டுமில்ல… மனசையும் கழுவிடுது. மழையைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது யாரும் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாதுனு தோணுது.

மழை ஒரு அதிசயம் இல்லையாண்ணா!’’ – வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். அப்படியே போஸ்ட் கிராஜுவேட் படிக்கிற பையன் வடிவம்தான். இந்தத் தடவை விஷாலோடு ‘கதகளி’. நெற்றியைச் சுரண்டும் பிசினஸே இல்லை… கேள்வியை முடிக்கும் முன்பே பதில் வந்து விழுகிறது.

‘‘ ‘கதகளி’… விஷாலோடு… நீங்கள் ஆக்‌ஷன் த்ரில்லர் செய்ததே இல்லை. எப்படி திடீரென்று..?’’‘‘விஷாலோடு ‘பாண்டிய நாடு’ சமயத்தில் பழக்கம் வந்தது. சுசீந்திரன் என் நண்பனாக அமைந்ததால் வந்த நட்பு இது. அப்போதுதான், ‘பாண்டி, நாம் படம் பண்ணலாமா’னு கேட்டார். ‘எனக்கு ‘இது நம்ம ஆளு’, ‘பசங்க 2’ ரெண்டுமே இறுதி நிலையில் இருக்கிறதே’ என்றேன். ‘உங்களுக்கு அதை முடிப்பதில் ஒரு பிரச்னையும் இருக்காது. உங்களால் செய்ய முடியும்’ என்றார். அவருக்கு ரெண்டு கதைகள் சொன்னேன். ஒன்று மாஸ் ஹீரோவுக்கான ஆக்‌ஷன் கதை. அவருக்கு அந்தக் கதை பிடிச்சிருந்ததை முகம் காட்டிச்சு.

அடுத்து ஒரு சிம்பிளான கதை சொன்னேன். அதை பெரிசா கவனம் எடுத்துக்கூட  நான் சொன்ன மாதிரி ஞாபகமில்லை. ஆனால், ‘இந்த சிம்பிள் கதையையே பண்ணுவோம்’னு சொன்னார் விஷால்! எனக்கும், சுசீந்திரனுக்கும் ஆச்சரியம் தாங்கலை. ‘என்னங்க, இந்தக் கதையை ஓகே பண்ணியிருக்காரு’னு வாய்விட்டே கேட்டுட்டார் சுசீ. ஏன்னா, அந்தக் கதை ஒரு ஆரம்ப நிலை ஹீரோ பண்ற கேரக்டர்.

சுசீந்திரன்கிட்டே அந்தக் கதை செமையா இருக்குனு சொல்லியிருக்கார். ‘இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் உண்மைக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கு. ஒரு குட்டி நாவலைப் படிக்கிற மாதிரி உணர்வு. அதான் இந்தக் கதையை ஓகே பண்ணினேன்’னு காரணத்தையும் சொன்னார். இப்படி ஒரு பெரிய ஹீரோ சேரும்போது நானும் நிறைய விஷயங்களைச் சேர்த்தேன். ஜெயிக்கிறது, தோக்குறது எல்லாம் வாழ்க்கையில கிடையாது…

சினிமாவிலும் கிடையாது… நாம் என்ன நினைக்கிறோமோ அதை மக்களுக்குக் கடத்திட்டாலே போதும்னு நினைக்கிறேன். எழுத்துக்கும், அது காட்சி வடிவமாவதற்கும் நடுவில் பெரிய கெமிஸ்ட்ரி இருக்கு. அதற்கு கூடுதலான உழைப்பும், கவனமும் தேவைப்படுகிறது. ‘கதகளி’யில் அப்படி ஒரு கலவை வந்திருக்கு!’’‘‘அதென்ன ‘கதகளி?’ ’’

‘‘ ‘கதகளி’க்கு நான் முன்னாடி மனசில் வச்சிருந்த தலைப்பு ‘இடி, மின்னல், மழை’. ஏன்னா, படத்தின் பின்னணியில் மழை இருந்துக்கிட்டே இருக்கும். இந்தப் படத்தில் எங்களுக்கு இயற்கை மழையே உதவிக்கு வந்தது. தண்ணீர் லாரி வச்சுக்கிட்டு தயாராய் இருந்தால், வானமே வந்து சாரல் மழை தூவிட்டுப் போகும். ‘இதப் பாருடா’ன்னு விஷால் முதற்கொண்டு ஆச்சரியப்பட்டு நிப்போம்.

நிஜ மழையில் தூரத்து இடம் கூட ஈரம் சுமந்து கிடக்கும். நல்ல ‘மூடு’ வந்து சேரும். படத்தில் ஆக்‌ஷன் இருக்கு… படம் சென்னையில் ஆரம்பிச்சு கடலூர்ல முடியும். சில சமயம் குடும்பத்தில் பிரச்னைகள் ‘கதகளி’ ஆடுமில்லையா… அப்படி ஒரு இடத்தில் படம் ஆரம்பிக்கும். சந்தோஷமும், சலசலப்புமாக திரிகிற ஒருத்தன் வாழ்க்கையில் சூழ்நிலை விளையாடினால் எப்படியிருக்கும். அதைச் சொல்லும் ‘கதகளி’. நிச்சயம் 30 டான்சரோடு கலர் கலரா விஷால் ஆடுற டான்ஸ் இதில் இல்லவே இல்லை!’’‘‘நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ஆச்சே… விஷால் எப்படியிருந்தார்?’’

‘‘ஒரு புகாரும் கிடையாது. இவ்வளவு குறைந்த நாளில் நான் எந்தப் படமும் எடுத்ததில்லை. அதற்காக தரத்தில் ஒரு குறையும் வைக்கவே இல்லை. ரிகர்சல், ரீடேக் கிடையாது. விஷால் உழைப்பின் உச்சம். ஒரு பக்கம் சங்க எலெக்‌ஷன், மறுபக்கம் பட ரிலீஸ் வேலைக்கு கட்டளைகளைப் பிறப்பிச்சுக்கிட்டே இருக்கார். ‘சட்’னு எந்தக் களைப்பும் தெரியாமல் ஷூட்டிங் வர்றார். நானே 24 மணி நேரமும் உழைக்க அஞ்ச மாட்டேன். என்னை முந்திக்கிட்டு விஷால் ஓடுறார். நல்ல பரபரப்பு. உழைக்க சளைக்காத ஆளுங்ககிட்ட வேலை பார்க்குறது ரொம்ப சௌகரியமாக இருக்கும். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிச்சு விடியற்காலை 6 மணிக்கு ஷூட்டிங் முடியும். எல்லாரும் விழிக்கும்போது,  நாங்க தூங்க தயாராகிடுவோம்.

மற்ற விஷால் படங்களின் அமைப்பில் ‘கதகளி’ வரவே வராது. இது முற்றிலும் புதுசு. சும்மா இருந்தவனைத் தூண்டி விட்டால் எப்படியிருக்கும்? இதில் வில்லனே கிடையாது. சூழ்நிலையே அதைச் செய்யும். இந்த ஆக்‌ஷனில் என்னோட ஸ்டைல் இருக்கு. எடுத்தவுடனே யாரும் பறக்கக் கூடாது, கயிறு கட்டி இழுக்கக் கூடாது, ஒரே டயத்தில் பத்துப் பேரை அடிக்கக் கூடாதுனு ஸ்டன்ட் மாஸ்டர்கிட்டே சொல்லிட்டேன். தனி மனிதனுக்கு அர்த்தத்தோடு கோபம் வந்தால் எப்படியிருக்குமோ, அதுதான் ‘கதகளி’. ‘உண்மைக்கு பயப்படுறவன்… ஒருத்தனுக்கும் பயப்பட மாட்டான்’னு ஒரு வரி படத்தில் வரும். இதுதான் படத்தோட மெயின் லைன்!’’
‘‘விஷால்கிட்ட ஏதாவது மாறுதல் தெரியுதா?’’

‘‘வெற்றி தருகிற மமதை, அலட்சியம், திமிரு எல்லாத்தையும் பக்குவமா பாக்கெட்ல மடிச்சு வச்சு தூக்கிப் போட்டுட்டார் போல. அவ்வளவு எளிமையா திரிகிறார். அவர் எந்தப் பதவி கொடுத்தாலும் இப்படித்தான் இருப்பார். இப்படியே இருக்கணும். அதுதான் என் ஆசை. ஃப்ரண்ட்ஷிப், பிசினஸ்… இது இரண்டையும் குழப்பிக்காம அழகழகா பிரிச்சு வச்சுக்கிறார்.

ஒரு சகோதரத்துவம் பேச்சுல இருக்கு. கடுமையான வார்த்தை ஒண்ணு கூட வாயில இருந்து வராது. நடிகரா லட்சணமா இருக்காமல், எனக்கு செலவுகளைக் குறைக்க வழி சொல்லிக் கொடுக்கிறார். எதுக்கு இத்தனை செலவுனு அப்பப்போ கடிவாளம் போடுறார். நான் படத்தில் லாபம் பார்க்கணும்ங்கிற அக்கறை அவர்கிட்ட இருக்கு. எல்லா ஹீரோக்களுக்கும் இந்த மனோபாவம் இருக்காது. நல்லா செலவு பண்ணட்டும்னுதான் நினைப்பாங்க. அப்படி இல்லாம ஒரு வித்தியாசமான மனசு விஷாலுக்கு!’’‘‘கேத்ரீன் தெரஸாவுக்கு எப்படி ரோல்?’’

‘‘குட்டி குட்டியா அருமையான லவ் போர்ஷன்கள் நிறைய இருக்கு. நம்ம பிராண்ட் செல்போன் கலாட்டாக்களும் உண்டு. கேத்ரீன்தான் படத்தில மீனுக்குட்டி. கல்யாணம் வேண்டாம்னு பிரிஞ்சு நிற்கும்போது, அவங்க சேர்ந்து இருக்குற சூழல் வருது. அப்படி ஒரு ரூட் பிடிச்சிப் போகுது கதை. கருணாஸ் முதல் தடவையா விஷால் கூட நடிக்கிறார்.

நம்ம படத்திற்கு மூணாவது தடவை பாலசுப்பிரமணியெம் கேமராவைப் பிடிச்சிருக்கிறார். ஒரு காதல், குழந்தைகள் படம், ஆக்‌ஷன் – ஹாரர் – த்ரில்லர்னு வெவ்வேற வகையில் அவர் வரிசையா என்கிட்டயே மூணு படம் பண்ணிட்டார். ஹிப் ஹாப் தமிழாதான் மியூசிக். ஜாலியான பசங்க. தமிழ்ப் பற்று… பொழச்சிக்குவாங்க. மியூசிக் டைரக்டர்களுக்கான தோரணையே இல்லை. ஆனா, ‘சடசட’னு வேலையில கெட்டி. எனக்கு ஆதியை ஹீரோவா பார்க்கத் தோணுது. பார்க்கலாம்!’’