மனிதநேயம் பூத்து மலரும் பூமி இது!

மனிதநேயம் பூத்து மலரும் பூமி இது!

‘இந்திய நாடு என் வீடு, இந்திய மக்கள் என் மக்கள்’ என்று மறைந்த கவிஞர் வாலி பாடியதும், ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு’ என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடலும், நூற்றுக்குநூறு உண்மை என்பதை தமிழ்நாட்டில் பெய்த கனமழை நிரூபித்துவிட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்யுமா?, கைகொடுக்குமா? என்று இருந்த நேரத்தில், நவம்பர் 1-ந் தேதியில் இருந்து வானத்தை திறந்து நயாகரா அருவி கொட்டியதுபோல, மழை பெய்தது. ‘ரெயின்… ரெயின்… கோ அவே…’, அதாவது ‘மழையே… மழையே… போய்விடு…’ என்று சொல்லும் அளவில், கனமழை பெய்து, தமிழ்நாட்டை வெள்ளக்காடாக்கிவிட்டது. 1918-ம் ஆண்டுக்குப்பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய மழை என்று 100 ஆண்டுகளுக்குப்பிறகு வரலாறு காணாத அளவு மழை பெய்திருக்கிறது. இந்த நிலையில், எல்லோருடைய மனிதாபிமான செயலும் மனதை நெகிழவைத்துவிட்டது. பிரதமர் ஓடோடி வந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுவிட்டு, அரசு எந்திரங்களை முடுக்கிவிட்டார். சென்னை நகரம் முழுவதுமே தண்ணீருக்குள் மூழ்கி தத்தளிக்கிறது. ஆனால், அமைச்சர்கள், மேயர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆற்றிய பணி அரும்பணியாக உள்ளது. இந்த நிலையில், ராணுவத்தின் முப்படைகளும் களத்தில் இறங்கின. தேசிய பேரிடர் மீட்பு படையின் பணியும் மகத்தானதாக இருக்கிறது. இதையெல்லாம்விட பொதுமக்களும், குறிப்பாக இளைய சமுதாயத்தினரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு நிவாரண உதவிகளை வழங்குகிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த சோகம், எங்கள் சோகம் என்று பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நிவாரண உதவிகளை வழங்க முன்வருவது, இந்தியாவில் ஒரு புதிய பாசத்தை உருவாக்கி விட்டது. கேரளாவில் உள்ள தேசிய மாணவர் படையின் பெண்கள் பிரிவினர், வீதிவீதியாக சென்று பெண்களுக்கு தேவையான பொருட்களை திரட்டி அனுப்பத்தயாராக இருப்பது, எங்கிருந்தாலும் பெண்ணுக்கு பெண் உதவுவாள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டு மக்களின் உதவிகள் எல்லாம் வருகிறது. நிலைமை சீரடைந்துவிடும். இனி எடுக்கவேண்டியது, இனியும் இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பதுதான். 1982-ம் ஆண்டிலும், 2012-ம் ஆண்டிலும் சென்னை எப்படி இருந்தது என்று வலைத்தளங்களில் ஒரு ஒப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் இந்த 30 ஆண்டுகளிலேயே பல நீர்நிலைகளை காணவில்லை. இதுபோல, தமிழ்நாடு முழுவதும் காணாமல்போன நீர்நிலைகளை உடனடியாக கண்டுபிடித்து சீரமைக்கவேண்டும். 2005-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும். அவைகளை உடனடியாக அமைக்கவேண்டும். அதுபோல, இந்த வெள்ளச்சேதத்தின்போது சீரிய முறையில் பணியாற்றிய தேசிய பேரிடர் மீட்பு படைபோல, மாநில அளவிலும் மீட்பு படைகள் அமைக்கப்படவேண்டும் என்ற ஒரு கொள்கை இருக்கிறது. அதையும் தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தவேண்டும். இனி இப்படியொரு பெருமழை பெய்தால் அதை சமாளிப்பது எப்படி?, சேதத்தை எப்படி தவிர்ப்பது?, எப்படி நிவாரணம் அளிப்பது? என்று திட்டமிடும் வகையில் உடனடியாக அரசு ஒரு புதிய கொள்கையை வகுத்து, அதை நிறைவேற்ற வகைசெய்யும் செயல்பாடுகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s