குழம்பாமல் இருப்பதற்கான
இரண்டு வழிகள்
முதல் வழியை
நினைவில் வைத்துக்கொண்டு
இரண்டாவது வழியை
மறந்து விடுவது.
இரண்டாவது வழி
தெரிந்து விட்டதா
முதல் வழியை
மறந்துவிடு
முதல் வழி
நினைவில் இருக்கின்றதா
இரண்டாவது வழியைத்
தேடாதே.
இலக்கை நினைவில் வைத்துக்கொண்டு
வழியை மறந்து விடுவது
பேதமை
வழியை நினைவில் வைத்துக்கொண்டு
இலக்கை மறந்து விடுவதுதான்
மேதைமை
எளிமைகள் நிறைந்த
சிக்கலான வழிகள்
மனிதனுடையவை
சிக்கல்கள் நிறைந்த
எளிமையான வழிகள்
இறைவனுடையவை
நல்வழிப்படுத்தத்
தேவை
மிகவும்
மோசமான அனுபவங்கள்
நல்லனுபவங்களைக் கொடுக்கத்
தேவை
மிகவும்
மோசமான வழிகள்
வழிகாட்டி மரம் கூறுவது
இதுதான்
மரமாக வாழ்ந்துகொள்
மரத்தைப் போல் நிற்காதே
புறம் நோக்கிச் செல்வதுதான்
பயணம் என்றால்
எல்லோருக்குமான வழிகாட்டியாக
நீங்கள் இருங்கள்
அகம் நோக்கிச் செல்வதுதான்
பயணம் என்றால்
உங்களுக்கான வழிகாட்டியாக
எல்லோரும் இருக்கட்டும்
நடமாடத் தெரிந்தவனின் திசையில்
சப்தம்தான் பயணிக்கும்
நடனமாடத் தெரிந்தவனின்
திசையில்தான்
இசையும் பயணிக்கும்.
எங்கே போக வேண்டும்
என்பது
தெரிந்திருக்கின்றது
எங்கே போய்க் கொண்டிருக்கின்றேன்
என்பதுதான்
தெரியவில்லை
மரணத்தின் வழியில் போனால்தான்
வாழ முடியும்