பெண் நலம் காப்போம்!

பெண் நலம் காப்போம்!

30 வயது என்றதுமே பெண்கள் பலருக்கும், ‘வயதாகுதே…’ என்ற கவலை வந்துவிடுகிறது. குடும்பம், குழந்தைகள், பணிச்சுமை எனப் பம்பரமாய் சுழன்றாலும்,  ஏனோ   வாழ்க்கையில் ஒருவிதப் பிடிப்பின்மையும், இனம்புரியாத சலிப்பும் வந்துவிடுகிறது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வயது ஒரு தடையே அல்ல. ஆறு வயதானாலும், 60 வயதானாலும் பெண்களின் பலம் ஒன்றுதான். அந்தந்தப் பருவங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களே, அவர்களை மனரீதியாக அவ்வாறு நினைக்கவைக்கிறது. பிரச்னைகளை எதிர்கொள்ள, ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணுக்குள் நிகழும் மாற்றங்களைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

6 வயது முதல்…

பெண், ஆண் என்ற பாலின வேறுபாடு குழந்தைகளுக்குத் தெரிய ஆரம்பிக்கும். தான் ஒரு பெண் குழந்தை என்ற புரிதல் இருக்கும்.

இந்த வயதில்தான் நல்ல தொடுதல் எது… கெட்ட தொடுதல் எது? (குட் டச்… பேட் டச்) என்பதைச் சொல்லித்தர வேண்டும். இந்த வயதில் ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய கோணங்கள் வேறுவிதமாக இருக்கும். அவர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.

மனதளவில் பெண் குழந்தைகளிடம், அவர்களின் வளர்ச்சியைப் பற்றி பெற்றோர் அல்லது பெரியவர்கள் புரியவைக்க வேண்டும். சானிட்டரி நாப்கின் எதற்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துரைப்பது நல்லது.

எட்டு வயதுக்கு மேல்  பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். 12 முதல் 14 வயதுக்குள் பூப்பெய்துவதுதான் சரி. எட்டு வயதுக்குள் பூப்பெய்திவிட்டால், அதை `பிரிகாஷியஸ் பியூபர்ட்டி’ என்பார்கள்.

மார்பக வளர்ச்சி, பிறப்புறுப்பு மற்றும் அக்குள் பகுதியில் முடி வளர்தல் போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படும். வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னையும் வரலாம். 14 வயதுக்கு மேல் பருவம் எய்தாமல் இருந்தால், மகளிர் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது அவசியம்.

வெளியிடங்களில், வெறும் காலோடு நடப்பதைத் தவிர்க்கலாம்.

ஹுக்வார்ம் போன்றவை உடலில் படர்ந்து, பிரச்னையை ஏற்படுத்தலாம். செருப்பு, ஷூ அணிவது அவசியம்.

16 வயதுக்கு மேல்…

இந்தியா போன்ற நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக இருக்கிறது. இது மேல்தட்டு மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில், அவர்கள் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவுகள் அல்ல; பெரும்பாலும் துரித உணவுகள். அதனால் பெரும்பான்மையான பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக ரத்தசோகை பிரச்னை ஏற்படுகிறது.

சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில் இரும்புச்சத்து அதிகம். சைவ உணவு சாப்பிடுபவர்கள், மாதுளை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, கேழ்வரகு, தினை, சாமை, கடலைஉருண்டை, நிலக்கடலை, பொட்டுக்கடலை, வெல்லம் சேர்த்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

வயிற்றுப் பூச்சிகளால்கூட இரும்புச்சத்துக் குறைபாடு வரலாம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பூச்சிகளை அழிக்கும் மருந்தைச் சாப்பிட வேண்டும்.

மாறிய வாழ்க்கைமுறைகளால், இளம் பெண்களில் ஏராளமானோர் சீரற்ற மாதவிலக்கு, குறைவான அல்லது அதிக ரத்தப்போக்கு, கடும் வயிற்றுவலி போன்ற பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு, உடல்பருமனும் முக்கியக் காரணமாக இருக்கிறது.

படிக்கும் பெண்கள் பெரும்பாலும் நடந்து பள்ளிக்குச் செல்வது இல்லை. பஸ், வேன், போன்ற வாகனங்களில் செல்வதால், உடல் உழைப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால், பெண் பிள்ளைகளுக்குக் கர்ப்பப்பையில் கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்ற பிரச்னைகள் அதிகமாகின்றன.

வயது, உயரத்துக்கு ஏற்ப எடையைப் பராமரிக்க, இதுதான் சரியான பருவம். நீர்க்கட்டிகள் இருக்கும் 90 சதவிகிதம் பெண்கள், அவர்களின் எடையைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்தால் தானாகவே சரியாகிவிட வாய்ப்புகள் அதிகம்.

26 வயதுக்கு மேல்…

கருத்தரித்தல் நிகழ்வதே இன்று பெரும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. கருவுறாமல் குழந்தையின்மை பிரச்னை ஏற்பட்டால், தகுந்த மருத்துவரிடம் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்களிடமும் பிரச்னை இருக்கலாம் என்பதால், இருவருமே பரிசோதிப்பதுதான் நல்லது. அதில், யாருக்குப் பிரச்னை என்பது தெரியவந்தால், அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனைகளை, சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

உடல்பருமன், சர்க்கரை நோய், இதயம் பலவீனமாக இருத்தல் போன்றவையும் குழந்தையின்மைக்குக் காரணமாகிறது. எனவே, பெண்கள் இந்த வயதில் உடல் நலனில் அதிக அக்கறையோடு, உணவுப் பழக்கங்களைச் சரிபடுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

பாலிசிஸ்ட்டிக் ஓவரி எனும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை இருந்தாலும் கருத்தரிக்கத் தடங்கல் ஏற்படும். காசநோய், குடும்பங்களில் யாருக்காவது இருந்தாலும், மரபியல் காரணங்களால் குழந்தைப்பேற்றில் சிக்கல் உண்டாகலாம். கர்பப்பைவாய் புற்றுநோயைத் தடுக்க, தடுப்பூசி உள்ளது, மருத்துவரை ஆலோசித்து இளம்வயதிலேயே இதைப் போட்டுக்கொள்ளலாம். கர்ப்பப்பைவாய், சினைப்பை ஆகியவற்றைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவ்வப்போது பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இதனால், கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தவிர்க்க முடியும்.

40 வயதுக்கு மேல்…

எப்படி ஆரம்பத்தில் மாதவிலக்குப் பிரச்னை இருந்ததோ, அதேபோல முடியும் தருவாயிலும் தொல்லைகள் கொடுக்கத்தான் செய்யும். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரச்னை ஏற்படும். மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும், பிடித்தமான செயல்களைச் செய்வதன் மூலமும் இந்தப் பிரச்னையில் இருந்து ஓரளவுக்கு வெளியில் வரலாம். சிலருக்கு, மாதவிலக்கு நிற்கும்போது எந்தத் தொந்தரவும் இருக்காது. சிலருக்கு, சீரற்ற ரத்தப்போக்கு, ஃபைப்ராய்டு சிஸ்ட், ஓவேரியன் சிஸ்ட், சிலவகை புற்றுநோய்களும் வரலாம். 40 வயதுக்குப் பிறகு பாப்ஸ்மியர் டெஸ்ட் செய்து, இவற்றை முன்பே அறிந்துகொள்ளலாம். இதனுடன் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க, மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வதும் அவசியம்.

இந்த வயதில் ஹார்மோன்கள் மாற்றம் அடையும். அதன் சுரப்பில் வித்தியாசம் இருக்கும். எனவே, அடிக்கடி மனக்குழப்பங்கள் ஏற்படும். ஹார்மோன்கள் எந்தெந்த வேலைகளைச் செய்ய வேண்டுமோ, அவை சீராக இயங்காததால், உடல் மற்றும் மனம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும்.

அதீத வியர்வை, படபடப்பு, டென்ஷன், தலைவலி, தூக்கமின்மை போன்ற தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

தன்னை யாரும் கவனிக்க மாட்டார்களா? என்ற எண்ணம் அதிகரிக்கும். எரிச்சலான உணர்வே எப்போதும் நீடிக்கும். தனக்கு தானே முக்கியத்துவம் தராமல் போய்விட்டோம் எனும் எண்ணங்கள் தோன்றி மறையும். தனிமையாகிவிட்டோம் எனும் மனஉளைச்சல் இருக்கும்.

மேற்சொன்ன பிரச்னைகள் எல்லாம் இந்த வயதுக்கே உரித்தானது என்ற புரிதல் இருந்தால், ஓரளவுக்குப் பிரச்னையில் இருந்து மீண்டு வரலாம்.

60 வயதுக்கு மேல்…

சொட்டுச்சொட்டாக சிறுநீர் கசிதல், குடலிறக்கம், பிறப்புறுப்பில் வறட்சித்தன்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் உள்ளன.

சிறுநீர்த் தொற்று வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், பிறப்புறுப்பைச் சுத்தமாகப் பராமரிக்க, மருத்துவர் பரிந்துரைப்படி கிரீம்களைப் பூசலாம். 60க்கு மேல்தான் அதிகக் கவனம் வேண்டும். ஹார்மோன் செயல்பாடு குறைவதால், சிறுநீர்ப்பையின் செயல்திறன் குறையும். சிரித்தால், அழுதால், தும்மினால்கூட சிறுநீர் வெளியேறும் பிரச்னை இருக்கும்.

ரத்தப்போக்கு தொடர்ந்தால், சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேலும் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் என்பதால், அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.

மனம் சார்ந்த தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். இந்த வயதில் தனிமைஉணர்வு  இருக்கும். வெறுப்பான மனநிலையில் தனக்கு நேரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவார்கள். இதனால், ஆரம்பகட்டத்திலேயே குணமாக்கக்கூடிய பிரச்னைகள் அறுவைசிகிச்சை வரை செல்ல நேரிடும் என்பதால் கவனம் தேவை. எந்ததெந்த வயதில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துவைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, மனதளவில் தயாரானால், என்றும் ஆரோக்கிய வாழ்க்கை நிச்சயம்.

– ப்ரீத்தி,

படங்கள்: சி.தினேஷ்குமார், மா.பி.சித்தார்த்


வரும்முன் காப்போம்!

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சி சிறந்தது.

பெற்றோர் நேரம் ஒதுக்கிப் பயிற்சிசெய்தால், வீட்டில் உள்ள குழந்தைகளும் பயிற்சிசெய்வார்கள்.

எந்த வேலையில் இருந்தாலும் அதற்கு ஏற்ப, உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.

உடல் சரியில்லாமல்போனால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். நோய்கள் வரும் முன் காப்பதுதான் சரி.

குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், தங்களது உடலை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளலாம்.