தனது டிரேட்மார்க் கோஷ்டி யுத்தத்தால் மீண்டும் அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது தமிழக காங்கிரஸ் கட்சி. பிரதமர் மோடி – முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து கூறிய ரசிக்க முடியாத வார்த்தைகளுக்காக அ.தி.மு.க.வினரின் எதிர்ப்புகளை சில மாதங்களுக்கு முன் எதிர் கொண்டவர் தமிழக காங்கிரஸ் இளங்கோவன். இந்த விவகாரம் அமுங்கிக்கிடக்கும் நிலையில், இளங்கோவ னுக்கும் மகளிர் காங்கிரஸ் தலைவியுமான விஜயதாரணிக்குமான மோதல்கள் உச்சகட்டதை எட்டியுள்ளன. இந்த சர்ச்சை குறித்து சோனியாவிடம் புகார் தெரிவிக்க விஜயதாரணியும், விளக்கமளிக்க இளங்கோவனும் டெல்லியை முற்றுகையிட, இரு தரப்பையும் தனித்தனியாக சந்தித்து, டெல்லி வரை தமிழக காங்கிரசின் மானம் காற்றில் பறப்பதைக் குறிப்பிட்டு இருதரப்பையும் கண்டித்திருக்கிறார் ராகுல்காந்தி.
கடந்த 19-ந்தேதி, இந்திராகாந்தி பிறந்தநாளை சத்திய மூர்த்திபவனில் கொண்டாடியது மகளிர் காங்கிரஸ். இதற்கான பேனர்களில் இளங்கோவன் படம் சிறிதாகவும், விஜயதாரணி படம் பெரிதாகவும் இருப்பதைப் பார்த்து, இளங்கோவ னின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரம் பொங்கியது. அந்த பேனர்களை கிழித்து, அதிலிருந்த இளங்கோவன் படத்தை அகற்றிவிட்டு, விஜயதாரணி படத்துடன் சத்தியமூர்த்தி பவனின் டாய்லெட்டில் வீசி எறிந்தனர். இது விஜயதாரணி தரப்பை செம டென்ஷனாக்கிவிட்டது.
இந்த நிலையில், நவம்பர் 29-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவன் இருப்பதையறிந்து மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சாந்தஸ்ரீனி, மானசா ஃபாத்திமா ஆகியோருடன் வந்த விஜயதாரணி, “”அந்த ஆள் இருக்கிறாரா?” என ஆவேச குரல் எழுப்பிக்கொண்டே இளங்கோவனின் அறைக்குள் நுழைந்தார். அனுமதியில்லாமல் தனது அறைக்குள் விஜயதாரணி நுழைந்ததை கண்டு டென்ஷனாகிவிட்டார் இளங்கோவன். அதன்பிறகே அச்சில் ஏற்றமுடியாத அத்தனை வார்த்தைகளும் இருதரப்பிலும் எதிரொலிக்க ஏக களேபரம்.
இதுகுறித்து விஜயதாரணியிடம் நாம் பேசியபோது, “”இளங்கோவனின் ஆதரவாளர்களின் அநாகரிகமான செயல்களுக்கு விளக்கம் கேட்டு நடவடிக்கை கோரத்தான் நான் சென்றேன். ஆனா, நான் என்ன சொல்ல வருகிறேன்னு கேட்க கூட
அவருக்குப் பொறுமையில்லை. எடுத்த எடுப்பிலேயே, “ஏய், வெளியில போ. தெரு நாய்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ன்னு ஆரம்பிச்சு மிக மோசமான, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். தலைவர்ங்கிற பொறுப்பான பதவியில இருந்துக்கிட்டு இப்படி பேசுவது சரியில்லை என்று நான் சத்தம் போட, அப்போதும் அவர் மோசமாக திட்டுவதை நிறுத்தவில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து போகமாட்டேன்னு சொல்லி அங்கேயே உட்கார்ந்துவிட்டேன். அதனால், எங்களைத் தள்ளி வெளியேற்றினார்கள் அவரது ஆட்கள். மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருக்கும் எனக்கே, இங்கு பாதுகாப்பில்லை என்றால் மற்ற பெண்களுக்கு? அதனால்தான், எனக்கு நடந்ததை புகாராக சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு எழுதியதுடன் பெண்களை இழிவுபடுத்தும் இளங்கோவனை மாற்றுங்கள் என கோரிக்கை வைத்தேன்” என்கிறார் ஆவேசமாக.
விஜயதாரணியின் யோசனைப்படி, இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எஸ். திரவியம் (வர்த்தக அணி தலைவர் பதவியில் வசந்தகுமாருக்குப் பதில் நியமிக்கப்பட்டவர்), பிராங்க்ளின் பிரகாஷ், பொன்பாண்டியன் ஆகியோர் மீது அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் சாந்தஸ்ரீனியும் மானசா ஃபாத்திமாவும். சாந்தஸ்ரீனியிடம் நாம் பேசியபோது, எடுத்த எடுப்பிலேயே, “”பேனரை கிழிக்கச் சொன்னதே நான்தான். வெளியில போ’ன்னு
இளங்கோவன் ஒருமையில் திட்ட, அப்போது அவரது ஆட்கள் எங்களை பிடித்து வெளியே தள்ளினார்கள். அசிங்கமாக நடந்துகொண்டனர். இதனை ஜீரணிக்க முடியாமதான் போலீசில் புகார் கொடுத்தோம்” என்கிறார். இந்த புகாரின் அடிப்படையில், அசிங்கமான வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல், அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல், பெண் வன் கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நாம் பேசியபோது, “”எனது அறையில் நிர்வாகி களுடன் பேசிக்கொண்டிருந்தேன். விஜய தாரணி சத்தம் போட்டபடியே வந்தார். “அமைதியாக இருங்கள். புகாரை எழுதிக் கொடுங்கள். விசாரிக்கிறேன்’னு சொன்னேன். கேட்கவில்லை. தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்ததால், வெளியே போங்கள்னு சொன்னேன். அதையும் மதிக்காமல் எனது அறைக்குள் உடகார்ந்துகொண்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் அவர் சத்தமாக பேச, நான் வெளியே போய்விட்டேன். இது தான் நடந்தது. என் மீது புகார் கொடுத்திருக்கிறார். அதனை சட்டப்படி சந்திப்பேன். இதுக்கெல்லாம் பயந்தவன் நானில்லை” என்கிறார் தனக்கே உரிய இயல்புடன்.

சம்பவத்தில் தொடர்புடைய எம்.எஸ். திரவியத்திடம் நாம் விசாரித்த போது, “விஜயதாரணிதான் திட்ட மிட்டே இந்த சூழலை உருவாக்கினார்’ என்று குற்றஞ்சாட்டியவர், “”விஜய தாரணிக்கு பின்னால் ஆளும் கட்சியும் எங்க கட்சியிலுள்ள சிலரும் இருக்கிறார்கள். பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் 19-ந்தேதி நடந்தது.
அப்போது விஜயதாரணி ஆட்கள் மன்னிப்புக்கேட்டுப் போனார்கள். பிரச்சனை சுமுகமாகிவிட்டது. ஆனா, 10 நாள் கழித்து விஜயதாரணி ஆவேசப்படுறார்னா என்ன அர்த்தம்? அவர் இயக்கப்படுகிறார். அதனால்தான், கம்ப்ளைண்ட் கொடுத்த உடனேயே எஃப்.ஐ.ஆர். போடப்படுகிறது” என்றார் விளக்கமாக.
இந்நிலையில், விஜய தாரணியின் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், அவரை நீக்க வேண்டுமென காங்கிரசின் 61 மாவட்ட தலைவர்களில் 49 பேர் கூட்டறிக்கை வாசித்துள்ளனர். இதில் யாருடைய கையெழுத்தும் பெறப்படவில்லை. இதனையே டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா. கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள வடசென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, “”மகளிர் காங்கிரஸ் தலைவராக வும் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார் விஜய தாரணி. அந்த பதவிகளுக்குரிய பொறுப் புணர்வோடு நடந்து கொள்ள தவறுகிறார். மாநில தலைவர் மீதே சேற்றை வீசியிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் அவரை நீக்க வலியுறுத்தியிருக்கிறோம்” என்கிறார்.

இந்த களேபரங்கள் குறித்து நாம் மேலும் விசாரித்தபோது, காங்கிரசில் நடிகை குஷ்புவுக்கு இளங்கோவன் தரும் முக்கியத்துவத்தை ஆரம் பத்திலிருந்தே விஜயதாரணி விரும்பவில்லை. அவர் தனித்து செயல்படுகிறார்.
மகளிர் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில்கூட கட்சித் தலைவரைக் கலந்தா லோசிப்பதில்லை. இந்த சூழலில்தான், இளங்கோவ னுக்கு எதிராக ஏற்கனவே டெல்லி வரை எதிர்ப்புக்கொடி பிடித்த கோஷ்டி தலைவர்கள் விஜயதாரணிக்கு ஐடியா கொடுக்க, அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். இந்த விவகாரம் ஆளும் கட்சிக்கும் தெரிய வர, இன்றைய நிலையில் தி.மு.க கூட்டணியில் சேரக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்பதால் அதன் உள்புகைச்சலை சாதகமாக்கிக் கொண்டது. காங்கி
ரசிலிருந்து சில பெண்கள் புகார் கொடுக்க வருவார்கள். அப்படியே பதிவு செய்து எஃப்.ஐ.ஆர். போடுங்கள் என மேலிடத்திலிருந்து அண்ணாசாலை போலீஸ் ஸ்டேசனுக்கு உத்தரவு வர, அதன்படியே வழக்கு பதிவு செய்யப்பட்டது என்கிறார்கள் சென்னை மாநகர காவல் துறையினர்.
இந்தப் புகாருக்குப் போட்டியாக, இளங் கோவனின் ஆதரவாளரான மகளிர் காங்கிரசின் துணைத்தலைவருமான ஆலீஸ்மனோகரி, தனது சாதியை குறித்து இழிவாக திட்டினார் என விஜயதாரணி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் கொடுக்க, அதுவும் பதிவாகியிருக்கிறது. இந்த புகார் சம்பவங்களை, தலித் தலைவர்கள் கண்டிக்கவே செய்கிறார்கள். விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், “”தலித் மக்களின் பாது காப்பிற்காக இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உங்களின் சுயநலத்துக்கு பயன் படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள்” என ஆவேசப் படுகிறார்.
டெல்லி காங்கிரஸ் தலைமை யின் நடவடிக்கைக்குப் பிறகே, இந்த புகார்களின் மீது வேகம் அதிகரிக்கும் என்கிறது போலீஸ் வட்டாராம்.