
அரசை நடுங்க வைத்தது அவரது பாட்டு வேட்டு. மக்களைச் சீரழிக்கும் டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் பாடியதற்காக தமிழக அரசால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழு பாடகர் கோவன், பிணையில் விடுதலையான நிலையில்… அவரை சந்தித்தோம். குரல் மென்மை, கருத்து வலிமை… அவர்தான் கோவன்.
உங்கள் பாடல் வரிகளில் அத்தனை கோபமான -நேரடித் தாக்குதல் நடத்தும் வார்த்தைகளைத் திட்டமிட்டு பயன் படுத்துகிறீர்களா?
கோவன் : மக்களின் கோப வரிகளைத்தான் நாங்கள் எங்கள் பாட்டில் எடுத்துச் சாடியிருக்கோம். இதற்காக கிராமங்களுக்குச் செல்கிறோம். அவர்களுடன் பழகுகிறோம். அவர்கள் சொல்வதை உள் வாங்குகிறோம். அதை அப்படியே பாடல்களில் வெளிப்படுத்துகிறோம்.
உதாரணத்திற்கு இன்று தமிழகத்தில் மதுவின் கொடுமை மிக மோசமாக மக்களைப் பாதித்திருக்கிறது. அரசே மது விற்பதைப் பற்றி பேசும் மக்கள், ஜெ.வை ஊத்திக் கொடுக்கும் உத்தமின்னு பேசுகிறார்கள். அத்துடன் ஜெ.வுக்கு தாலி அருமை தெரியாது.. அவர் டாஸ்மாக் கடை திறந்து ஊரிலிருக்கும் அனைத்துப் பெண்களின் தாலியையும் அறுக்கிறார் என வெளிப் படையாகவே திட்டுகிறார்கள். அந்தக் கோப வார்த்தைகளைத்தான் எனது டாஸ்மாக் பாட்டில் “ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்’னு பாடினேன். மக்களின் மனதைத்தான் பிரதிபலிக்கிறேன்.

கைது அனுபவம் எப்படி?
கோவன் : திடீரென நள்ளிரவில் என் வீட்டுக் கதவைத் தட்டினார் கள். கதவைத் திறந்தேன். அப்படியே குண்டுக்கட்டாக ஒரு வேனில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றார்கள். என் மனைவியின் கண்ணீ ருடன் கூடிய கதறல் மட்டுமே எனக்குக் கேட்டது. எனது ஊரான திருச்சியின் எல்லையிலிருந்து இன்னொரு வண்டியில் ஏற்றினார்கள். அப்பொழுதுதான் சென்னை போலீஸ் என்னை கைது செய்தது என புரிந்தது. அதன்பிறகு திண்டிவனம் தாண்டி வந்த பிறகுதான் பொழுது விடிந்தது. அதன்பிறகு நான் கைது செய்யப்பட்டதாக எனது உறவினர் களுக்குத் தெரிவித்தார்கள். அதுவரை நான் உயிருடன் இருக்கிறேனா? அல்லது இறந்துவிட்டேனா என வெளியுலகிற்கு தெரியாமல் வைத்திருந்தார்கள். அதன்பிறகு புழல் சிறையில் என்னை, “முதல்வரின்’ விருந்தாளி என்ற பெயருடன் தனிமைச் சிறையில் வைத்திருந்தார்கள். தற்பொழுதுதான் பிணையில் விடுதலையாகியிருக்கிறேன்.
முதன் முதலில் இதுபோன்ற பாடல்களை எப்பொழுது நீங்கள் பாட ஆரம்பித்தீர்கள்?
கோவன் : 1983-ஆம் வருடம் திருச்சி பெல் நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திரைப்படப் பாடல்களை மிக நன்றாகப் பாடி அங்கிருந்த தொழிலாளர்கள் மத்தியில் பெயர் பெற்றேன். அதைப் பார்த்த மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள், “இந்தப் பாடல்களைப் பாடுங்கள்’ என மக்களின் துயரங்களைப் பற்றி பாடும் பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அந்தப் பாடல்களில் இருந்த கிராமியத் தன்மையும் வாழ்வியல் உண்மைகளும் என்னைக் கவர்ந்தன. அதற்குப் பிறகு எனக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தார்கள். அரசியலும் கிராமியத் தன்மையும் என்னை மக்கள் கலை இலக்கியக் குழு பாடகனாக மாற்றியது.
நீங்கள் எழுதிய முதல் பாடல் எது?
கோவன் : “சாமக்கோழி கூவுனப்ப நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம்’ இதுதான் எனது முதல் பாடல். அதற்குப் பிறகு சாதிக்கொடுமைகள், வரதட்ச ணைக் கொடுமைகள் இவற்றிக்கெதிராக பாடல்கள் இயற்றினேன். “தாமிரபரணி எங்கள் ஆறு, அமெரிக்க கோகோ வெளியேறு’ என கோகோ கோலாவிற்கு எதிராக நான் எழுதிப் பாடிய பாடல், அந்த நிறுவனத்தை நெல்லையிலிருந்து விரட்டியடிப்பதற்காக நடந்த போராட்டத்தின் அடிநாதமாக அமைந்தது.
இந்தப் பாடல்களில் சொல் லப்படும் அரசியல் சிந்தனைகள், உங்களது சொந்தக் கருத்தா?
கோவன் : நிச்சயமாக இல்லை. இது எங்கள் அமைப்பின் அரசியல் கருத்துக்களை நான் பாடலாக்கு கிறேன். பன்னாட்டுக் கம்பெனிகள் இந்த நாட்டைச் சுரண்டுவதை எதிர்த்து பாடல் எழுதியிருக்கிறேன். பாராளுமன்றத் தேர்தல் முறை, அதற்காக ஓட்டுப் பொறுக்குவது… இவற்றை எதிர்த்து பாடல் எழுதி யிருக்கிறேன்.
இனி எதிர்காலத் திட்டம்…?
கோவன் : சிறையை விட்டு வெளியே வந்ததும் “ஊரெங்கும் மழை வெள்ளம்… தள்ளாடுது தமி ழகம், சேதத்தை பார்க்க வந்த அம்மா வோட கார்கூட நனையல’ என புதிய பாட்டைப் பாடிக் கொண்டுதான் வெளியே வந்தேன். வளர்ப்பு மகன் திருமணம், 2ஜி ஊழல், சோனியா காந்தி, ஜெயலலிதா என எந்தப் பிரச்சினையெல்லாம் இந்த சமூகத்தைப் பாதிக்கிறதோ அதற்கெதிராக எனது பாட்டுக்கள் புறப்படும். அதை யாரா லும் தடுக்க முடியாது.