சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு இரட்டை பெண் குழந்தை

தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்தது

சென்னை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. ராமாவரம் பகுதியில் சென்னை மற்றும் புறநகரை புரட்டிப்போட்ட கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதந்தது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கூடுதல் தண்ணீரும் திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றின் ஓரங்களில் இருந்த பல பகுதிகளில் முதல் மாடி அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதுபோல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரூர் அருகே உள்ள ராமாவரம் பகுதியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28). கணவர் பெயர் கார்த்திக். 9 மாத கர்ப்பிணியான தீப்தியின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டன. ஹெலிகாப்டரில் மீட்பு இதனால் தீப்தி வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வழியின்றி தவித்தார். கடந்த 2-ந் தேதி இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டன. இதனால் தீப்தி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உதவி கேட்டனர். இதனை பார்த்த ஒரு ஹெலிகாப்டர் உதவிக்கு வந்தது. விமானப்படை வீரர்கள் தீப்தியை மீட்டு தாம்பரம் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது கார்த்திக் தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்தார். அவருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. கார்த்திக் அங்கிருந்து புறப்பட்டு, 3-ந் தேதி தாம்பரம் வந்து சேர்ந்தார். இரட்டை பெண் குழந்தை தீப்தியின் பிரசவம் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது. இதனால் தீப்தி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள கம்ப்யூட்டர் பதிவுகளில் தனது மருத்துவ அறிக்கைகள் இருக்கும் என்று ஆலோசனை தெரிவித்தார். அப்போது தீப்திக்கு லேசான பிரசவ வலி ஏற்பட்டதால் மீண்டும் அவரை ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையினர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பத்திரமாக தரை இறக்கப்பட்டு தீப்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 4-ந் தேதி தீப்திக்கு அங்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தேவதைகள் போல கார்த்திக் கூறும்போது, ‘‘இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் ஒவ்வொருவர் முகங்களிலும் மகிழ்ச்சியை வரவழைக்கும் தேவதைகள் போல எங்கள் மகள்கள் பிறந்திருக்கிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறோம். விமானப்படை வீரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். மீட்பு பணிகளில் விமானப்படை மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறது. ‘தீப்தியைத் தவிர இதுபோல மேலும் 3 முதல் 4 கர்ப்பிணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி மிகவும் சிரமமானது. பைலட்டுகள் 7 மாத, 9 மாத கர்ப்பிணிகளை மீட்டதாக கேள்விப்பட்டதும், சக வீரர்களிடம் இதை எப்படி அவர்கள் செய்தார்கள் என்று கேட்டு வியப்படைந்தேன்’ என்று விமானப்படை அதிகாரி ஒருவர் கூறினார். 7 மாத கர்ப்பிணி நெடும்பாக்கத்தை சேர்ந்த சுகன்யா (29) என்ற 7 மாத கர்ப்பிணி, அவரது 3 வயது குழந்தையுடன் கடந்த 3-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். சுகன்யா கூறும்போது, ‘‘நாங்கள் குடியிருந்த 4 மாடி குடியிருப்பில் 2 மாடிகள் வரை தண்ணீர் வந்துவிட்டது. மின்சாரம், செல்போன் போன்ற எந்த வசதியும் இல்லை. ஹெலிகாப்டர் வந்து மீட்கும்வரை எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை’’ என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s